ஞாயிறு, 24 டிசம்பர், 2017

கிறிஸ்துமஸ் பண்டிகைக் கொண்டாட்டமும்; வரலாறும்!



கிறிஸ்துமஸ் பண்டிகைக் கொண்டாட்டமும்; வரலாறும்!

உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்துவர்களால் உற்சாகமாகக் கொண்டாடப்படும் கிறிஸ்துமஸ் பெருவிழாவுக்கு இன்னும் சில நாட்களே எஞ்சியுள்ளன.
இந்நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகையும் கொண்டாட்டங்கள் குறித்தும், அதன் வரலாறு குறித்தும் இங்கே பார்க்கலாம்.
கிறிஸ்துமஸ் அல்லது கிறிஸ்து பிறப்பு விழா, கிறிஸ்தவர்களால் ஆண்டுதோறும் டிசம்பர் 25ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனை பெரும்பாலான கிறிஸ்தவர்கள் பின்பற்றுகின்றனர். அதேசமயம், கிழக்கு மரபு வழி திருச்சபைகளைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள், ஜனவரி 7ம் தேதியை கிறிஸ்துமஸ் பண்டிகையாகக் கொண்டாடுகின்றனர்.
மேலும், கிறிஸ்துமஸ் என்பது ஒரு மரபு வழிக் கொண்டாட்டம் என்றும், அது இயேசு கிறிஸ்துவின் பிறந்த நாள் இல்லை என்றும் ஒரு செவி வழிச் செய்தி உலாவுகிறது.

கிறிஸ்தவ பண்டிகையின் வரலாறு:
இயேசு கிறிஸ்து டிசம்பர் 25ம் தேதி பிறந்தார் என்று, கி.பி., 3ம் நூற்றாண்டைச் சேர்ந்த செக்டுஸ் ஜூலியஸ் அப்ரிகானுஸ் என்ற மதப் போதகரால் அறிவிக்கப்பட்டது. ஏனெனில், இயேசு கிறிஸ்து கருவில் உருவாகியதாகக் கருதப்படும் நாள் மார்ச் 25 ஆகும். இதில் இருந்து, சரியாக, பத்தாவது மாதம் டிசம்பர் 25ம் தேதியே தொடங்குகிறது. டிசம்பர் 25ல் இருந்து, ஜனவரி 7ம் தேதிக்குள் ஏதேனும் ஒரு தினத்தில் அவர் பிறந்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
ஆரம்பகாலத்தில், கிறிஸ்தவர்கள், இயேசுவை சிலுவையில் அறைந்த தினம் மார்ச் 25 என்றே கருதிவந்தனர். அவர் கருத்தரித்த நாளிலேயே மரித்தும் போனார் என்ற அர்த்தத்தில் அவர்கள் இவ்வாறு கூறினர்.
எனினும், கி.பி.245ம் ஆண்டு ஒரிஜன் என்ற மதப் போதகர், இயேசுவின் கரு அவதரிப்பு, இறந்த நாளை கொண்டாட எதிர்ப்பு தெரிவித்தார். அவரது கருத்துக்கு கிறிஸ்தவ திருச்சபை மறுப்பு தெரிவித்துவிட்டது.
டிசம்பர் 25ம் தேதியே கிறிஸ்துமஸ் கொண்டாப்பட்டதாக, கி.பி 354ம் ஆண்டைச் சேர்ந்த பிலோகலஸ் நாட்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. இதுவே, கிறிஸ்துமஸ் பண்டிகையின் தொன்மைக்கான வரலாற்றுச் சான்றாகும்.
ரோம் உள்பட பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் சிறந்து காணப்பட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இயேசுவின் பிறப்பு யூதர்களுக்கு மட்டுமின்றி, உலக மக்கள் அனைவருக்குமே மகிழ்ச்சியும், ஒளியும் கொண்டுவந்ததாகக் கூறி, ஜனவரி 6 அல்லது 7ம் தேதியை கிறிஸ்து பிறந்த நாளாகக் கொண்டாடுகின்றனர். இதனை கத்தோலிக்க திருச்சபை இறைக்காட்சி விழா என்ற பெயரில் பின்பற்றுகிறது.
எட்வட் கிப்பன் என்ற ஆய்வாளரின் கருத்துப்படி ஆரியவாதம் மிகுந்து காணப்பட்ட கான்சாண்டிநோபிளில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின. கி.பி.400ம் ஆண்டில் கிறிசோஸ்டொம் என்பவர் கத்தோலிக்கப் பேராயராக பதவியேற்றபிறகே, கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் அதிதீவிரமாக நடைமுறைப்படுத்தப்பட்டதாக, எட்வட் கிப்பன் குறிப்பிடுகிறார்.



கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள்:
டிசம்பர் 24ம் தேதி நள்ளிரவு கிறிஸ்தவர்கள் அனைவரும் உலகம் முழுவதும் உள்ள பேராலங்களில் சென்று சிறப்பு வழிபாடு நடத்துவர். நள்ளிரவு திருப்பலியில் நற்கருணை விருந்தும் நடத்தப்படும்.
இதையொட்டி, கிறிஸ்தவர்களின் வீடுகள் மற்றும் பேராலயங்களிலும் கிறிஸ்து அவதரித்ததன் அடையாளமாக, நாணல் போன்ற புல்லினால் குடில் கட்டி, குழந்தை இயேசு மரியாள், யோசேப்பு, இடையர்கள், ஞானிகள் செரூபங்களை வைப்பார்கள். விண்மீனுக்கு அடையாளமாக காகிதத்திலான விண்மீண்களை வண்ண விளக்குகளால் அலங்கரிப்பார்கள்.

கிறிஸ்தவர்களின் வீடுகளில் விருந்து நடைபெறும். எல்லாரும் புத்தாடை அணிவார்கள். நண்பர்கள், உறவினர்களையும் அழைத்து, உபசரிப்பார்கள். இரவில் வாண வேடிக்கைகளும், கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்படுவது உண்டு.
ஒருசிலர் கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து, குழந்தைகள் உள்பட பல தரப்பினருக்கும் பரிசுப் பொருட்களை வழங்கி, வாழ்த்துவதும் உண்டு.
பல இடங்களில் கிறிஸ்துமஸ் பஜனை நடைபெறும். அப்போது, இசைக் குழுவினர் அணியாகச் சென்று வீடுகள்தோறும் தேவ கீர்த்தனைகளைப் பாடுவார்கள்.
மொத்தத்தில், கிறிஸ்துமஸ் பண்டிகை கிறிஸ்துவர்களுக்கு மட்டுமின்றி, உலக மக்கள் அனைவருக்குமே ஒரு உற்சாகமான பண்டிகையாகவே உள்ளது. மதங்களை கடந்த ஒற்றுமையின் சின்னமாக, கிறிஸ்துமஸ் விளங்குகிறது என்பதில் ஐயமில்லை.
மெர்ரி கிறிஸ்துமஸ்…

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக