ஞாயிறு, 3 டிசம்பர், 2017

புதுக்கோட்டை குடுமியான்மலை அருள்மிகு சிகாநாதர் திருக்கோயில்


 புதுக்கோட்டை குடுமியான்மலை அருள்மிகு சிகாநாதர் திருக்கோயில் 

 சிவாலயமாக இருந்தாலும் பெருமாளின் தசாவதார சிலைகள் தூண்களில் வடிக்கப்பட்டுள்ளன. அதிலும் குதிரையில் அமர்ந்துள்ள வீரனின் சிலை கல்கி அவதாரம் என்றே கருதப்படுகிறது. ஒரு குதிரையில் இளைஞனும், மற்றொரு குதிரையில் முதியவர் ஒருவரும் உள்ளனர். கல்கி அவதாரத்தின்போது இளைஞர், முதியவர் என்ற பாகுபாடின்றி, இவ்வுலகத்தில் உள்ளோர் அழிக்கப்படுவார்கள் என்ற நியதியின் அடிப்படையில் இவ்வாறு அமைக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.

 நவக்கிரகங்களின் அடிப்படையில் இதை சனித்தலமாகக் கொள்ளலாம். பத்தாம் நூற்றாண்டில் இத்தலம் திருநலக்குன்றம் என்று அழைக்கப்பட்டது. சனீஸ்வரனால் சோதிக்கப்பட்ட நளன் இத்தலத்தில் வந்து சிகாநாதரை வணங்கி அருள்பெற்றான் என்று கர்ண பரம்பரைக் கதை கூறுகிறது. எனவே சனி பார்வையால் துன்பப்படுபவர்கள் இத்தல இறைவனை வணங்கி அருள்பெறலாம்.

*சங்கீத கல்வெட்டு*

 சங்கீத வித்வான்கள் அவசியம் செல்ல வேண்டிய கோயில் இது. இவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விதிமுறைகள் கொண்ட கல்வெட்டைக் காணலாம். கிரந்தத்தில் இங்கு எழுதப்பட்டுள்ளது. ருத்ராச்சாரியார் என்பவரின் சீடரான பரமமகேஸ்வரன் என்ற மன்னன் இந்த ராகங்களை பாடியதாக கூறப்பட்டுள்ளது. ஆனால், தற்போது இதன் அருகே நெருங்கமுடியாத அளவுக்கு தேனீக்கள் கூடுகட்டி வாழ்கின்றன.

*ஆன்மீக அதிசயம்*

 பொதுவாக சிவாலயங்களில் துவார பாலகர்கள் கண்டிப்பான முகத்தோற்றத்துடன் கிழக்கு நோக்கி வாயில் காப்பார்கள். ஆனால், இங்கோ தெற்கும், வடக்குமாக நின்ற நிலையில் இருதுவாரபாலகர்கள் உள்ளனர். இவர்களில் ஒருவர் புன்னகை பூத்தநிலையிலும், மற்றொருவர் சற்றே கடுமையான முகத்தோடும் செதுக்கப்பட்டுள்ளனர். இது ஒரு ஆன்மீக அதிசயமாகும்.
இங்கே அம்பிகை அகிலாண்டேஸ்வரி என அழைக்கப்படுகிறாள். மற்றொரு அம்பிகை சன்னதியும் இங்குள்ளது. உமையாள்நாச்சி என்ற தேவதாசி, அம்மன் சன்னதி ஒன்றை கட்டினாள். அவளுக்கு மலையமங்கை என பெயர் சூட்டினாள். காலப்போக்கில் அது சவுந்தரநாயகி சன்னதியாக மாறியிருக்கக்கூடுமென தெரிகிறது.

*சிறப்பம்சங்கள்*

★ இது ஒரு சனித்தலம் ஆகும். மலை உச்சியில் நாயன்மார்கள் அறுபத்துமூவரின் சிலைகளை பொதுவாக பிரகாரங்களிலேயே காணமுடியும். ஆனால், இக்கோயிலில் மலை உச்சியில் சிற்பமாக வடித்துள்ளனர். நாயன்மார்கள் சிலை முடியும் இடத்தில் விநாயகர் சிலை வைப்பது மரபு. ஆனால், இங்கு ரிஷபத்தில் அமர்ந்த சிவபார்வதி நடுவில் இருக்க, நாயன்மார்கள் இருபுறமும் இருப்பது சிறப்பான அம்சம். இத்தகைய அமைப்பை தமிழகத்தில் வேறெங்கும் காணமுடியாது. கோயில் பிரகாரம் சுற்றி வரும்போது, இந்தச் சிற்பங்களை மலையுச்சியில் ஏறாமல், கீழிருந்தபடியே தெளிவாகப் பார்த்து தரிசிக்க முடிகிறது.

*அருள்மிகு சிகாநாதர் திருக்கோயில் பரிகாரஸ்தலம்*

காதல் திருமணம் செய்ய விரும்புவோர், தங்களுக்கு ஏற்படும் தடைகள் விலக இத்தலத்திற்கு வந்து வழிபடலாம். சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.

*அருள்மிகு சிகாநாதர் திருக்கோயில் விசேஷ நாட்கள்*

மகாசிவராத்திரி சிறப்பாக நடைபெறும்.

*அருள்மிகு சிகாநாதர் திருக்கோயில் செல்லும் வழி*

புதுக்கோட்டையில் இருந்து விராலிமலை செல்லும் ரோட்டில் 16 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

*தொலைப்பேசி எண்*

+91 4322 221084, 98423 90416


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக