சனி, 3 ஆகஸ்ட், 2019

ஆடிப்பூரம்: மனதிற்கு பிடித்த வாழ்க்கைத்துணை அமைய ஆண்டாளை வணங்குங்க


ஆடிப்பூரம்: மனதிற்கு பிடித்த  வாழ்க்கைத்துணை அமைய ஆண்டாளை வணங்குங்க

சனிக்கிழமை (3/8/2019) ஆடிப்பூர நாளாகும். ஆடி மாதத்தில் வரும் பூர நட்சத்திரம் "ஆடிப்பூரம்" என்று சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. பூமாதேவி ஆண்டாளாக அவதரித்த நன்னாள் ஆடிப்பூரம். ஸ்ரீவில்லிப்புத்தூரில் மட்டுமல்ல தமிழகத்தின் அனைத்து வைணவத் திருத்தலங்களிலும் ஆண்டாள் பிறந்த நட்சத்திரமான  ஆடிப்பூரத்தை நோக்கி ஆடி உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மேலும், ஆடிப்பூரத்தை முன்னிட்டு அனைத்து சக்தி ஸ்தலங்களிலும்  வளைகாப்பு திருவிழா நடைபெறுகிறது. பெண்கள் கோயில்களில் கடந்த ஒரு வாரமாகவே வளையல் அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.

ஆடி மாதம் சூரியன், கடக ராசியான சந்திரன் வீட்டிலும், சந்திரன் சூரியனின் ராசியான சிம்மத்திலும் பரிவர்த்தனை பெற்றிருந்தபோது, நள வருடம், சுக்ல பட்சம், சதுர்த்தசி  பூர நட்சத்திரம் கூடிய சனிக்கிழமையன்று துளசி மாடத்தினருகில் பெரியாழ்வாரால் கண்டெடுக்கப்பட்டவள் ஆண்டாள். காதலித்து அரங்கநாதனையே கரம்  பற்றியவள். ஆடிப்பூரத் திருவிழா ஆண்டாள் அவதரித்த திருவில்லிப்புத்தூரிலும், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலிலும், ஆண்டாளின் அண்ணனான ராமானுஜரின் அவதார  ஸ்தலமான ஸ்ரீபெரும்புதூரிலும் ஆடி உற்சவம் உற்சாகமாக நடைபெற்று வருகிறது மற்றும் பல திருமால் ஆலயங்களிலும் விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது.


ஆடி மாதத்தில் வரும் பூரம் நட்சத்திரத்தில் இந்த விழா அனைத்து வைஷ்ணவ தலங்களில் மட்டுமல்லாது மாதவனின் தங்கையாம் ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி குடிகொண்டுள்ள  அனைத்து அம்மன் கோவில்களிலும், வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் தான் உமாதேவியும் தோன்றியதாகக் கூறப்படுவதுண்டு. உலக மக்களைக் காக்கச்  சக்தியாக அம்பாள் உருவெடுத்தாள். இவ்வளவு சிறப்புகள் கொண்ட ஆடி மாதத்தில் வரும் பூர நாள் அம்பிகைக்கு மிகவும் உகந்த நாள். தாய்மை என்பது பெண்களுக்கே  உரித்தான ஒரு தனிச் சிறப்பு. உள்ளே உயிர் வளர்த்து உதிரத்தால் பால் கொடுக்க ஒரு தாயால்தான் முடியும்.

நம்முடைய மானிட வழக்கமான சூல் கொண்ட பெண்ணுக்கு வளைகாப்பு நடத்துவது போல் படைக்கும் அன்னையாய் இருந்தும் கன்னி என்று மறைகள் பேசும் அம்பிகைக்கு  நாம் வளைகாப்பு நடத்திக் கண்டு களித்திடும் நாள். "வளைகாப்பு” என்ற சடங்கு கருவுற்ற பெண்களுக்கு அவரின் கணவர், பெற்றோர் உறவினர்களால் செய்யப்பெறும் ஒரு சமயச் சடங்காகும். அனேகமாக கருவுற்ற பெண்களுக்கு 5-ஆம் மாதம் வளைகாப்பு என்ற சடங்கு நிகழ்த்தப் பெறுகின்றது.

பங்குனி உத்திரத்தில் இறைவனுக்கும் இறைவிக்கும் திருமணம் நடைபெற்றதைத் தொடர்ந்து ஆடிப் பூரத்தில் அனைத்து அம்பாள்களுக்கும் வளைகாப்பு செய்வது மரபு. இந்த  ஆண்டு காவிரித்தாய்க்கு அவரது சகோதரர் ஸ்ரீ ரங்கநாதர் சீர் கொடுக்கும் பதினெட்டாம் பெருக்கு விழாவும் இணைந்து வருவது பெண்மைக்கு மேன்மேலும் பெருமை  சேர்க்கும் விதமாக அமைந்துள்ளது.

காவிரிக்குச் சூல்

காவிரித்தாய் இப்போது அவள் கருவுற்று இருக்கிறாள் என்ற ஐதீகத்தில் தான், இவையெல்லாம் செய்யப்படுகின்றன. சிறுவர்கள் சப்பரம் என்ற ஒன்றை (தேர் போல சிறியதாக  இருக்கும்) அழகாக அலங்கரித்து, அதிகாலையில் இருந்தே வீதிகளில் சத்தமிட்டு இழுத்தபடி ஓடுவார்கள். மாலையில், அந்தச் சப்பரத்தின் உள்ளே, ஒரு சிறிய அகல்விளக்கை  வைத்து மெதுவாக இழுத்து வருவார்கள்.

சிறுமிகளும் கன்னியரும் சுமங்கலியரும் காவிரி நதிக்கரையில் கூடி -  தலை வாழையிலையில் - காதோலை கருகமணி, வளையல்கள், தாம்பூலம், எலுமிச்சங்கனி,  விளாம்பழம், நாவற்பழம், வாழைப்பழம், பூச்சரம் இவற்றுடன் காப்பரிசியும் படைத்து தீபம் ஏற்றி தேங்காய் உடைத்து கற்பூரங்காட்டி வணங்கி - மஞ்சள் தடவிய நூலினை  பழுத்த சுமங்கலிகளின் கையால் வாங்கி கழுத்தில் அணிந்து கொண்டு காவிரியில் பூச்சரங்களுடன் தீபங்களை மிதக்க விடுவது - பரவசமான மங்கல நிகழ்ச்சியாகும்.

ஸ்ரீ ரங்கநாதர் தங்கைக்குச் சீர்

ஆடிப்பதினெட்டு அன்று - ஸ்ரீரங்கத்தில் காவிரிக்கரையின் அம்மா மண்டப படித்துறையில் - நம்பெருமாள் எழுந்தருளி - யானையின் மீது சீர்வரிசை கொண்டுவந்து  கங்கையினும் புனிதமான காவிரிக்குச் சகல மரியாதையுடன் சமர்ப்பிக்கின்றார்.

ஜோதிடத்தில் பூரம் நக்ஷத்திரம்

சுக்கிரனின் ஆதிக்கம் பெற்ற பூரம் நட்சத்திரம் வானத்தில் ஒரு கட்டில் கால் போல் காட்சி அளிக்கிறது. பூர நக்ஷத்திரத்தில் அதிபதி சுக்கிரன் ஆவார். மேலும் தூக்கம்,  தாம்பத்தியம், மருத்துவமனை வாசம் போன்ற படுக்கை சார்ந்த அனைத்து விஷயங்களுக்கும் காரகர் சுக்கிர பகவான் ஆவார். கால புருஷ ராசியின் பன்னிரெண்டாமிடமும்  அயன சயன போக ஸ்தானமும் ஆன மீனத்தில் சுக்கிரன் உச்சம் பெறுவது குறிப்பிடத்தக்கது.


இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மிகவும் இனிமையாகப் பேசுவார்கள். எல்லோராலும் பாராட்டப்பெறுவார்கள். எல்லோரையும் நேசிப்பார்கள். பொதுவாக சுக்கிரன் இல்லற  வாழ்க்கையைக் குறிக்கும் கிரகமாகும். அதனால் தான் அவரை களத்திரகாரகன் என்று ஜோதிடம் கூறுகிறது. மேலும், சுக்கிரனே ஆடம்பர வாழ்க்கை, ஆபரணச் சேர்க்கை,  பங்களா போன்ற பெரிய வீட்டில் வாழும் வாழ்க்கை, வண்டி, வாகன யோகம் போன்றவற்றிற்கும் அவரே காரகனாகிறார்.

ஒருவருக்கு காதல் கை கூடவேண்டும் என்றால் சுக்கிரனின் அருள் வேண்டும். அதிலும் காதலித்தவரையே கைப்பற்ற வேண்டும் என்றால் சுக்கிரனின் அருள் இருந்தால்  மட்டுமே சாத்தியம். சுக்கிரன், சிற்றின்பத்தில் நாட்டம் கொள்ளச்செய்பவர். திகட்டாத தாம்பத்தியத்தையும் ஈர்ப்பு சக்தியையும் தரக்கூடியவர் ஆண்களின் சுக்கிலத்திற்கும்  பெண்களின் சுரோணிதத்திற்கும் இவரே காரண கர்த்தா. ஒரு ஜாதகத்தில் காதலைக் குறிப்பிடும் பாவம் ஐந்தாம் பாவமாகும். பூர நக்ஷத்திரம் கால புருஷனின் ஐந்தாம்  வீடாகிய சிம்மத்தில் அமைந்திருப்பதன் மூலம் காதலுக்கும் பூரத்திற்கும் உள்ள தொடர்பை உணர முடியும்.

கணவன் மனைவி தாம்பத்திய வாழ்க்கையை நிறைவடையச் செய்யும் காதல் மற்றும் காமத்தின் காரகரும் சுக்கிர பகவானேதான்.  சுக்கிரன் ஒருவர் ஜாதகத்தில் 6/8/12  தொடர்பு மற்றும் நீசம், வக்ரம், பாவர்கள் தொடர்பு பெற்றுவிட்டால் அவர் வாழ்க்கையில் படுக்கை சுகமும் அதனால் ஏற்படும் மகிழ்ச்சியும் எட்டாக்கனிதான்.

காலையில் இருந்து எத்தனை விஷயங்களில் வெற்றி பெற்றுவிட்டாலும் இரவில் படுக்கையில் ஒருவர் தோற்றுவிட்டால் அவர் நிலையை யோசித்துப் பார்க்கவே முடியாது.   ஒருவர் ஜாதகத்தில் குருவும் சுக்கிரனும் இணைந்து நின்றுவிட்டாலோ, சூரியனும் சுக்கிரனும் நெருங்கிய பாகையில் நின்று விட்டாலோ அவர்களுக்கு தாம்பத்தியத்தில்  ஆர்வம் குறைந்துவிடும்.

தூக்கத்தைத் தீர்மானிக்கும் முக்கிய கிரகம் சுக்கிரன் ஆகும். சுக்கிரன் என்றாலே சுகம்தான் நினைவிற்கு வரும். நல்ல சுவையான உணவு (சுக்கிரன்), குளுமையான சூழ்நிலை  (சுக்கிரன்) இனிமையான இசை (சுக்கிரன்) வசதியான படுக்கைகள் மற்றும் நறுமணம் மிக்க மலர்கள் மற்றும் சுவை நிறைந்த பழங்கள் (சுக்கிரன்) கூடவே அழகான மற்றும்  அன்பான மனைவி (சுக்கிரன்) இவையெல்லாம் நினைத்துப் பார்க்கும்போதே இனிமையும் தூக்கம் வருவது போன்ற உணர்வும் ஏற்படுகிறதல்லவா. இவையெல்லாம்  சுகமானதாகவும் சுவை மிக்கதாகவும் அமைய ஜாதகத்தில் சுக்கிரன் நன்றாக அமைய வேண்டும். சுக்கிரனின் ஆதிக்கம் பெற்ற பூர நக்ஷத்திரம் கட்டில் கால் வடிவில்  இருப்பதில் வியப்பென்ன இருக்கமுடியும்?


இவை மட்டுமல்லாது வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் பெற சுக்கிரனின் அருள் வேண்டும். சுக்கிரனின் ஆதிக்கம் கொண்ட பரணி, பூரம் மற்றும்  பூராடம் ஆகிய நக்ஷத்திரங்களின் அதிதேவதை மஹாலக்ஷமி எனவும் பூர நக்ஷத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய தெய்வம் மஹாலக்ஷமியின் அவதாரமான  ஆண்டாள் எனவும் நக்ஷத்திர சிந்தாமணி எனும் பழம்பெரும் ஜோதிட நூல் கூறுகிறது.

ஜோதிட ரீதியாக காதலில் வெற்றி பெறும் அமைப்பு யாருக்கு?

1. சுக்கிரனை அதிபதியாக கொண்ட ரிஷப மற்றும் துலாம் ராசியை லக்னமாகவோ சந்திரா லக்னமாகவோ கொண்டவர்கள்.

2. சுக்கிரன், ரிஷபம் அல்லது துலா ராசியில் ஆட்சி பெற்றவர்கள் மற்றும் மீனத்தில் உச்சமடைந்தவர்கள், கன்னியில் புதன் சந்திரனோடு சேர்ந்து நின்று நீசபங்க  மடைந்தவர்கள்.

3. லக்னம் சுக்கிரன் சாரத்தில் அமையப்பெற்றவர்கள்.

4. பஞ்ச மகா புருஷ யோகத்தில் மாளவியா யோகம் பெற்றவர்கள்.

5. சுக்கிரன் ஆத்ம காரகனாக அமையப்பெற்றவர்கள்.

6. எந்த லக்னமாக இருந்தாலும் சுக்கிரன் சந்திரன் சேர்க்கை பெற்றவர்கள்.

7. ரிஷப, துலாம் வீடுகளை 2, 5, 7, 9 வீடுகளாக அமையப்பெற்றவர்கள் அல்லது 2, 5, 7, 9 ஆகிய வீடுகளில் சுக்கிரன் நிற்கப்பெற்றவர்கள்.


8. ஜாதகத்தில் காதல் கிரஹங்களான சந்திரன், புதன் மற்றும் சுக்கிரன் எந்த விதத்திலேனும் சேர்க்கை பெற்றிருப்பது. முக்கியமாகச் சுக்கிரனோடு சந்திரனோ அல்லது புதனோ  அல்லது இருவரும் இணைந்தோ சேர்க்கை பெறுவது.

9. ஜோதிடத்தில் செவ்வாய் ஆண்மகனையும், சுக்கிரன் அழகிய இளம்பெண்ணையும் குறிக்கிறது. ஒருவர் ஜாதகத்தில் செவ்வாய் சுக்கிரன் எந்த விதத்தில் சேர்க்கை  பெற்றிருந்தாலும் அவர்களுக்கு காதல் மற்றும் காம உணர்ச்சி அதிகமாக இருக்கும். இத்தகைய அமைப்பு பெற்றவர்கள் காதலில் ஒரு வேகத்தோடு இருப்பதோடு அதிகமாக  வளையல்/ரிஸ்ட் பேண்ட் போன்ற ஆபரணங்களை தன் காதலர்/காதலிக்கு வழங்க விரும்புவார்கள்.

முதல் காதல் கடிதம்

முதன் முதலில் காதல் கடிதம் எழுதியது யார் தெரியுமா? நம்ம ருக்மணி தேவிதான். கிருஷ்ண பரமாத்மாவுக்கு காதல் கடிதம் எழுதினாள். என்ன எழுதினாள் தெரியுமா?  கண்ணா! பெண்மைக்கு இலக்கணம் நாணம். ஆனால், நாணத்தைவிட்டு இக்கடிதத்தை எழுதுகிறேன். புருஷர்களில் உத்தமனே (புருஷோத்தமனே) நரசிம்ம அவதாரம்  எடுத்ததால்) நீ ஒரு சிங்கம். தங்கத்தை அடைய யார் வேண்டுமானாலும் விரும்பலாம். அதுபோல நானும் உன்னை அடைய விரும்புகிறேன். உன் வீரம் உலகறிந்தது. நானும்  அறிவேன்.


உன்னைத்தான் விவரம் அறிந்த நாளிலிருந்தே காதலிக்கிறேன். ஆயினும், இதுவரை நான் உன்னைக் கண்டதில்லை. நீயாக வந்து என்னை மணமுடிப்பாய் என்று உன்னை  நினைத்துப் பல பூஜைகள் செய்து வருகிறேன். நீயோ மாயன்; மாமாயன். எங்கோ மறைந்துகொண்டு என்னை ஆட்கொள்ள மறுக்கிறாய். இப்போது என்னை வேறொருவனுக்கு மணமுடிக்க ஏற்பாடுகள் நடக்கின்றன. இந்நிலையில், என்னால் ஒன்றும் செய்ய இயலவில்லை. நீயே கதி. எனவேதான் நாணத்தைவிட்டு இம்மடல் விடுக்கிறேன்."

ருக்மணியின் ஸ்வரூபமாகிய ஸ்ரீ ஆண்டாளை இந்த ஆடிப்பூர நன்னாளில் திருமண பாக்கியம் அமையாமல் இருப்பவர்கள் தகுந்த கணவன் மனைவியை அடையவும்   சண்டைபோட்டுப் பிரிந்து வாழும் கணவன் மனைவி கூடவும், வேலை காரணமாகக் கணவனும் மனைவியும் படுக்கையில் இணைய முடியாமல் தவிப்பவர்கள் கூடவும்,  வியாபாரத்தில் பிரச்னை தரும் கூட்டாளிகள் இணக்கமாகவும், அனைத்து பகைவர்களும் நட்பு பாராட்ட விரும்புபவர்களும் வணங்குவது சிறப்பாகும்.

முக்கியமாக ஜாதகத்தில் சஷ்டாஷ்டக தோஷம் இருப்பவர்கள் இந்த ஆடிப்பூர நாளில் ஆண்டாளை வணங்க, அனைத்து கருத்து வேறுபாடுகளும் மறையும் என்பது நிதர்சனம்.
நன்றி தினமணி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக