அத்திவரதர் ‘ஜலவாசம்’ செய்வது எப்படி?
அத்திவரதர் ஜலவாசம் செல்வது எப்படி என்பது பற்றி தலைமை பட்டர் கிட்டு கூறியதாவது:-
வரதராஜ பெருமாள் கோவிலில் 2 குளங்கள் உள்ளன. ஒன்று தாயாரின் பொற்றாமரை குளம். மற்றொன்று அத்திவரதர் வாசம் செய்யும் அனந்தசரஸ் குளம். அனந்தசரஸ் குளம் 24 அடி ஆழம் உடையது. 24 படிக்கட்டுகளையும் கொண்டது.
24 என்பதற்கும் முக்கியத்துவம் உண்டு காயத்ரி மந்திரத்தில் உள்ள 24 அட்சரங்களை குறிக்கிறது. கிரேதாயுகம், திரேதாயுகம், துவாபரயுகம், கலியுகம் என 4 யுகங்களில் இந்த கலியுகத்தில் ஆதிசேஷன் வரதராஜ பெருமாளுக்கு தினமும் பூஜை செய்கிறார். எனவேதான் இந்த குளத்துக்கு அனந்தபுஷ்கரணி என்பர்.
இந்த குளம் நிறைய தண்ணீர் எப்போதும் நிறைந்து காணப்படும். குளத்தின் நடுவே பிரம்ம தீர்த்தம், சக்கர தீர்த்தம், வராக தீர்த்தம் என்ற 3 தீர்த்தக் கிணறுகள் உள்ளன. இதில் தீர்த்தம் ஆட ஆண்டுக்கு ஒரு முறை பிரம்மோற்சவத்தின்போது வரதராஜ பெருமாள் உற்சவ மூர்த்தி எழுந்தருள்வார்.
எனக்கு தெரிந்தவரை எப்போதுமே இந்த குளம் வறண்டது கிடையாது. இப்போதும் அத்திவரதர் எழுந்தருள்வதற்காக குளத்தில் இருந்த தண்ணீர் மோட்டார் மூலம் வெளியேற்றப்பட்டு பொற்றாமரை குளத்தில் நிரப்பி வைக்கப்பட்டுள்ளது.
47 நாட்கள் அத்திவரதர் பக்தர்களுக்கு அருள்பாலித்த நிலையில் நாளை (இன்று) அனந்தசரஸ் குளத்திற்குள் வைக்கப்பட இருக்கிறார். காலை மற்றும் மாலை நித்தியப்படி பூஜை நடக்க இருக்கிறது. இரவு 10 மணிக்கு மேல் தைல காப்பு அணிவிக்கப்படும்.
அதாவது பச்சை கற்பூரம், ஏலக்காய், லவங்கம், சாதிக்காய், சாம்பிராணி, வெட்டிவேர், சந்தனாதி தைலம் ஆகியவற்றை காய்ச்சி வடிகட்டி அந்த தைலம் அத்திவரதர் சிலை மீது பூசப்படும்.
அத்தி மரத்திலான சிலை என்பதனால் அதை தண்ணீருக்குள் வைக்கும்போது அடுத்த 40 ஆண்டுகள் வலுவாக இருக்க வேண்டும். அறிவியல் ரீதியாகவும், சாஸ்திர ரீதியாகவும் பார்த்தோம் என்றால் தண்ணீருக்குள் சிலை இருக்கும்போது அதன் அருகே மீன், பாம்பு போன்றவையெல்லாம் செல்ல வாய்ப்பு இருக்கிறது.
அவை சிலை மீது உரசும்போது சேதம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. இதுபோன்ற தைலங்கள் பூசப்படுவதால் மீன், பாம்பு போன்றவை சிலைக்கு அருகே செல்லாது. இன்று மாலை நித்தியப்படி பூஜை முடிந்தபிறகு அத்திவரதருக்கு பட்டு வஸ்திரம் அணிவிக்கப்படும்.
இன்று (17-ந்தேதி) அத்திவரதருக்கு முதலில் ‘புண்ணியா வதனம்‘ செய்யப்பட்டு அபிஷேகம் செய்யப்படும். அதன் பிறகு சுவாமிக்கு புது பட்டாடை சாத்தி நெற்றியில் திருமண் பட்டை அணிவிக்கப்படும்.
அதைத் தொடர்ந்து சக்கரை பொங்கல், வெண்பொங்கல், கேசரி உள்பட பலவகை பதார்த்தங்களை படைத்து நைவேத்தியம் செய்யப்படும். அனந்தசரஸ் குளத்தில் அமைந்துள்ள நாலுகால் மண்டபத்தின் அடியில் 8 படிகளை கொண்ட குளம் இருக்கிறது. அதற்குள்தான் அத்திவரதரை ஜலவாசத்துக்கு வைக்கப்படும்.
இரவு 10 மணியில் இருந்து 12 மணிக்குள் அனந்தசரஸ் குளத்திற்குள் அத்திவரதர் சிலை சயன நிலையில் வைக்கப்படும். செங்கல் தரையில்தான் அத்திவரதர் இருப்பார். சிலையின் தலைக்கு அடியில் கருங்கல் இருக்கும். சிலை வைக்கப்படும்போது வேறு யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
சுவாமியின் தலைப்பகுதி மேற்கு திசையிலும் அதாவது விமானத்தை நோக்கியும், பாதம் கிழக்கு நோக்கியும் இருக்கும். அவரை சுற்றிலும் கற்களால் ஆன 16 நாகர் சிலைகள் வைக்கப்படும்.
பட்டாடையுடன் கூடிய வெறும் சிலை மட்டுமே தண்ணீருக் குள் இருக்கும். அத்திவரதரை சுற்றி இருக்கும் நாகர்கள் அவருக்கு பூஜை செய்வதாக ஐதீகம். இனி 40 வருடங்களுக்கு பிறகு அதாவது 2059-ம் ஆண்டு ஜலவாசத்தில் இருந்து அத்திவரதர் வெளியே வருவார்.
இது அந்தரங்க விஷயம். அதனால் ஒருசில அர்ச்சகர்கள் அனுமதிக்கப்படுவார்கள். கடந்த 1979-ம் ஆண்டு அத்திவரதரை தரிசனம் செய்ய முடியாதவர்கள் இப்போது தரிசனம் செய்து இருக்கிறார்கள். நேரில் வந்து தரிசனம் செய்ய முடியாதவர்கள் தொலைக்காட்சிகளிலும், பத்திரிகைகளிலும் பார்த்தனர்.
அடுத்த 40 ஆண்டுகளுமே அவர் நம்முடனேயே இருப்பார். உலகை சுபிட்சமாக வைத்து இருப்பார்.
இவ்வாறு அவர் கூறினார்.
நீராழி மண்டப அறை சிற்பங்கள்
நீராழி மண்டபத்தின் கீழ் அத்திவரதர் சயனிக்கும் அறையில் இருந்த சகதி அகற்றப்பட்டு புதுப்பிக்கப்பட்டுள்ளது. அந்த அறையில், ஆதிசேஷன் மீது ஸ்ரீகிருஷ்ணர் சிற்பம், அதற்கு மேலே ஸ்ரீகிருஷ்ணர் புல்லாங்குழல் ஊதும் காட்சி கொண்ட சிற்பம் மற்றும் வராஹ பெருமாள், லட்சுமி தாயாரை தனது இடது தொடையில் அமர்த்தியுள்ள சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. மேலும் அந்த அறையில் இறங்கி செல்ல 6 படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. மிகுந்த சிற்ப வேலைப்பாடுகள் கொண்ட சிங்க தலைகளின் சிற்பங்களும் அங்கு உள்ளன.
thanks maalaimalar.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக