அருள்மிகு பசுவண்ணன் (சித்தி விநாயகர்) திருக்கோயில், சுக்கிரவாரப்பேட்டை, கோயம்புத்தூர்,
மூலவர் : பசுவண்ணன் (சித்தி விநாயகர்)
பழமை : 500 வருடங்களுக்குள்
ஊர் : சுக்கிரவாரப்பேட்டை
மாவட்டம் : கோயம்புத்தூர்
மாநிலம் : தமிழ்நாடு
*திருவிழா:*
இத்தலத்தில் சங்கடஹர சதுர்த்தி, பிரதோஷம், கோகுலாஷ்டமி ராமநவமி, ஆகிய தினங்களில் சிறப்பு அபிஷேக பூஜைகள் நடந்தாலும் விநாயக சதுர்த்தி மட்டுமே தலையாய பெருந்திருவிழாவாகும்.
*தல சிறப்பு:*
ராவணனிடம் ஆத்ம லிங்கத்தைப் பறித்து பிரதிஷ்டை செய்ததால், இவரை வணங்கினால் சிவனையும் தொழுத பலனைப் பெறலாம்.
*திறக்கும் நேரம்:*
காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு பசுவண்ணன் (சித்தி விநாயகர்) திருக்கோயில் சுக்கிரவாரப்பேட்டை, கோயம்புத்தூர்.
*பொது தகவல்:*
கோவில்களில் ஒரு வித்தியாசமான கோவில் இது. முகப்பில் விநாயகர், ஸ்ரீதேவி பூதேவி சமேத பெருமாள், நந்தி மற்றும் வள்ளி தெய்வானை சமேத முருகன் என சுதை சிற்பங்களின் அணிவகுப்பு. பசுவண்ணன் கோவில் என்றால் வேணுகோபால சுவாமி கோவிலாக இருக்குமோ என எண்ணத் தோன்றுகிறது. நந்தியம் பெருமாள் நுழைவுவாயில் நேர் மேலே இருப்பதால் சிவாலயமாகக்கூட இருக்கலாம் எனவும் எண்ணத் தோன்றுகிறது.
கோவிலில் நுழைந்து மூலவரைப் பார்த்த பின் தான் நமது எண்ணங்கள் அனைத்துமே தவறு என்பதை உணர முடிகிறது. பசுவண்ணன் எனும் திருநாமத்தில் அருள்பாலிக்கும் இறைவன் விநாயகப் பெருமான் ஆவார்.
அர்த்த மண்டபத்தில் சிவலிங்கமும் வாகனமாகிய நந்தியம் பெருமானும் அருளுகின்றனர். ஸ்ரீதேவி பூதேவி சமேத வரதராஜப் பெருமாள், முருகன், ஆஞ்சநேயர், விஷ்ணு துர்க்கை, தட்சிணாமூர்த்தி நவகிரகங்கள் ஆகியோர் தனிச் சந்நிதிகளில் வீற்றிருக்கின்றனர். இச்சந்நிதியின் தென்கிழக்கு மூலையில் அரசமரத்தடியில் விநாயகர், நாகம், சிவன் ஆகிய திருமேனிகள் உள்ளன. தினசரி காலை 8.30, 10.30, மாலை 6.30 என மூன்று கால பூஜைகள் நடைபெறுகிறது.
1920ஆம் ஆண்டில் மகா மண்டபத்தில் அமைக்கப்பட்ட சக்கரத்துடன் கூடிய மணி, கட்டிட அமைப்பு ஆகியன கோவில் பழமையை உறுதி செய்கின்றன.
*பிரார்த்தனை*
தொடங்கும் எந்த செயலிலும் தடைகள் வராமல் இருக்க பிராரத்தனை செய்யப்படுகிறது. ஆன்ம பலம் பெறவும், இறைவழிபாடு அதிகரிக்கவும் இவரை வணங்கலாம்.
*நேர்த்திக்கடன்:*
விநாயகருக்கு அபிஷேகம் செய்து, புது வஸ்திரம் மற்றும் அருகம்புல் மாலை சாற்றி அர்ச்சனை செய்யலாம்.
*தலபெருமை:*
கருவறையில் மூலவராக சித்தி விநாயகர் பசுவண்ணன் என்ற திருநாமத்தில் வீற்றிருக்கின்றார். வலது கரங்களில் அங்குசம், தந்தம் இடது கரங்களில் பாசம், மோதகம் என ஏந்தி சதுர்புஜ இடம்புரி நாயகனாகத் திகழ்கிறார். இடது காலை மடக்கி வலது காலை தாமரை பீடத்தின் மீது வைத்து கம்பீரமாக காட்சியளிக்கிறார் சிலையின் பின்புறம் சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய கல்லினால் உருவாக்கப்பட்ட திருவாச்சி உள்ளது. ராவணனிடம் ஆத்ம லிங்கத்தைப் பறித்து பிரதிஷ்டை செய்ததால், இவரை வணங்கினால் சிவனையும் தொழுத பலனைப் பெறலாம். விநாயகப் பெருமானுக்கு பசுவண்ணன் என்ற பெயர் வந்த காரணம் குறித்த கதையைக் காண்போம். தினமும் ராவணனின் தாயார் கடலில் குளித்துவிட்டு மணலில் சிவ லிங்கம் பிடித்துவைத்து பூஜித்து வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
ஒருநாள் அவ்வாறு பூஜை செய்து கொண்டிருந்த போது ஒரு பெரிய அலைவந்து அந்த லிங்கத்தை கடலினுள் அடித்துச் சென்றது. இதனால் ராவணனின் தாய் கதறி அழுத வண்ணம் சோகத்தில் இருந்தாள். அந்தநேரம் அவ்வழியே வந்த ராவணன் தாய் அழுவதைப்பார்த்து, அதிர்ந்து போய் காரணத்தைக் கேட்டான்.ராவணன் உடனே, நீங்கள் கவலைப்பட வேண்டாம். ஈசன் வைத்திருக்கும் ஆத்மலிங்கத்தையே பெற்றுத் தருகிறேன் எனக் கூறி கைலாயம் நோக்கிச் சென்றான்.
ராவணன் கைலாயம் வருவதை தன் தவ வலிமையால் அறிந்த நாரதர் அருகில் இருந்த தேவேந்திரனிடம் ராவணன் ஈசனிடம் ஆத்ம லிங்கத்தைப் பெற வந்து கொண்டிருக்கிறான். அதை அவன் பெற்று விட்டால் நீங்கள் அனைவரும் அவனுக்கு அடிமையாகி விடுவீர்கள். எனவே ஈசனிடம் ஆத்மலிங்கத்தை வழங்க வேண்டாம் என வலியுறுத்துங்கள் எனக் கூறினார்.
அதன்படி தேவேந்திரன் தேவர்களுடன் கைலாயம் நோக்கி பயணமானார்கள். அதற்குள் கைலாயத்தில் ராவணனின் கடுமையான தவத்திற்கிரங்கி ஈசன் அவன் முன் தோன்றி அவன் விரும்பி கேட்டபடி ஆத்ம லிங்கத்தை வழங்கினார். மேலும் இந்த லிங்கத்தை செல்லும் வழியில் எங்கும் கீழே வைக்கக் கூடாது. அப்படி வைத்து விட்டால் அது பாதாள லோகத்திற்குச் சென்று விடும். என எச்சரித்து அனுப்பினார். ஆத்மலிங்கத்தைப் பெற்றுக் கொண்ட ராவணன் பெரு மகிழ்ச்சியோடும் ஈசன் திருவருளோடும் இலங்கைக்கு திரும்பிக் கொண்டிருந்தான்.
அதே நேரம் தேவேந்திரனும் தேவர்களும் கைலாயத்தை அடைந்து ஈசனைத் துதிக்க, ஆத்மலிங்கத்தைப் பெற்றுக் கொண்ட விபரத்தை அறிந்து மிக்க கவலை அடைந்தனர். அதைக் கண்ட ஈசன், ராவணன் இலங்கைக்கு ஆத்மலிங்கத்தைக் கொண்டு செல்ல விடாமல் தடுங்கள். அதுவே உலக நன்மைக்கு வழிவகுக்கும் என்றார்.
யாரிடம் சென்றால் இந்த பிரச்சனைக்கு ஒரு தீர்வு கிடைக்கும் என யோசித்தனர். விஷ்ணுவிடம் சென்றால் தான் தீர்வு கிடைக்கும் என அவரிடம் சென்று முறையிட்டனர். இதைச் செவிமடுத்த விஷ்ணு இப்பிரச்சனையை தீர்த்து வைப்பதாக உறுதி அளித்தார். உடனே விநாயகப் பெருமானை அழைத்து நீ பிரம்மச்சாரி வேடம் தரித்து ராவணன் செல்லும் இடங்களுக் கெல்லாம் பின் தொடர்ந்து செல். அவன் சந்தியா வந்தனம் செய்வதற்காக தன்னிடம் உள்ள ஆத்மலிங்கத்தை உன்னிடம் கொடுப்பான். அதை நீ பூமியில் வைத்துவிடு எனக் கூறி அனுப்பிவைத்தார்.
பிரம்மச்சாரி வேடத்தில் இருந்த விநாயகப் பெருமான் ராவணனைத் தொடர்ந்து சென்றார். சப்த கோமேச்வரத்திலிருந்து கோ கர்ணத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தான். இது தான் தக்க தருணம் என கருதிய மகா விஷ்ணு தன் சக்ரா யுதத்தை ஏவி சூரியனை மறைத்தார். சூரியன் மறைந்ததைக் கண்ட ராவணன், சந்தியா வந்தனம் செய்ய வேண்டுமே எனச் சொல்லியபடியே எதிரே தெரிந்த கடற்கரையே நோக்கி விரைந்தான்.
அங்கு விநாயகர் சிறுவனாக மாடு மேய்த்துக் கொண்டிருந்தார். ராவணன் அச்சிறுவனை அணுகி, நான் இலங்கை மன்னன் ராவணன். கடலில் குளித்து சந்தியா வந்தனம் செய்துவிட்டு வரும்வரை இந்த லிங்கத்தை வைத்திரு என்ன காரணம் கொண்டும் கீழே வைத்துவிடாதே எனச் சொல்லி ஆத்ம லிங்கத்தை சிறுவனிடம் கொடுத்தான். சிறுவனோ அண்ணா லிங்கம் மிகவும் கனமாக இருக்கிறது. நீண்ட நேரம் என்னால் சுமக்க முடியாது. என்னால் முடியாமல் போகும் பட்சத்தில் மூன்று முறை உங்கள் பெயரை உரக்கச் சொல்லி அழைப்பேன். அதற்குள் வரவில்லை எனில் லிங்கத்தை கீழே வைத்து விடுவேன். தவறாக நினைக்க வேண்டாம் என உறுதியளித்தார் சிறுவனாக இருந்த விநாயகர்.
ராவணன் சந்தியா வந்தனம் செய்ய கடலை நோக்கி விரைந்தான். கடற்கரையை அடைந்த பின்னர் அண்ணா, அண்ணா என மூன்றுமுறை கூவினார். ராவணன் வரவில்லை. எனவே ஆத்ம லிங்கத்தை கீழே வைத்து விட்டார். இதுவே தக்க தருணம் என கருதிய மகாவிஷ்ணு தன் சக்ரா யுதத்தை திரும்ப அழைத்துக் கொண்டார். சூரியனின் வெப்ப கதிர்கள் அனலாக கொதிக்க ஆரம்பித்தது.
தீடீரென சூரியன் மறைந்ததும், பின் சிறிது நேரத்தில் சூரியன் வெளிப்பட்டு அனலாகக் கொதித்ததும் ஏதோ சூழ்ச்சி நடந்திருப்பதை ராவணன் அறிந்து கொண்டான். லிங்கத்தைப் பெற திரும்ப ஓடோடி வந்தான். சிறுவன் வெறும் கையுடன் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியுற்றான். ஏண்டா லிங்கத்தைக் கீழே வைத்தாய்? என கடுங்கோபத்துடன் கேட்டான். கனம் தாங்கமுடியவில்லை. மூன்று முறை உங்களை கூவி அழைத்தேன். நீங்கள் வரவில்லை. எனவே லிங்கத்தைக் கீழே வைத்து விட்டேன் என அச்சிறுவன் பதில் அளித்தான். ஆத்திரமடைந்த ராவணன் சிறுவனின் தலையில் ஓங்கி ஒரு குட்டு வைத்தான். வலி தாங்காமல் ஆ அம்மா என அலறிவிட்டார் சிறுவனாக இருந்த விநாயகர். ராவணன் தன் பலம் கொண்ட மட்டும் லிங்கத்தை எடுக்க முயன்றான். அசைக்க கூட முடியவில்லை. கோபத்தில் லிங்கத்தைச் சுற்றி இருந்த துணியைக் கிழித்து எரிந்தான். அவை விழுந்த இடத்தில் 4 லிங்கங்கள் தோன்றின.
பசுவை மேய்த்துக் கொண்டு சாமார்த்தியமாக ராவணனை ஏமாற்றி ஆத்மலிங்கத்தைப் பறித்த விநாயகரை பசுவண்ணன் என தேவர்கள் போற்றினர். இந் நிகழ்வே விநாயகருக்கு பசுவண்ணன் என பெயர் வர காரணமாயிற்று. இத்தலம் கர்நாடக மாநிலம் கோகர்ணத்தில் உள்ளது. இதே பெயரில் கோவை நகர் சுக்கிரவார பேட்டையில் அமைந்துள்ள இந்த சித்தி விநாயகர் ஆலயமும் மிகப் பழமை வாய்ந்ததாகும்.
கோவை நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளும் மைசூர் மன்னர் ஆட்சிக்குட்பட்டிருந்த காலம். மைசூரில் இருந்து இங்கு வந்து குடியேறிய மக்கள் தங்கள் குல தெய்வமான பசுவண்ணனுக்கு கோவில் கட்ட முடிவு செய்து, தற்போதுள்ள இடத்தில் கோவில் கட்டி விநாயகப் பெருமானை பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தனர். மைசூர் மன்னரின் ஆட்சிக் காலம் முடிந்த பின் மைசூர் மக்கள் தங்கள் தாயகம் திரும்பி விட்டனர்.
பின் இப்பகுதியில் வசித்த தேவாங்க குல மக்கள் இப்பெருமானை தங்கள் குலதெய்வமாக வழிபட்டு வருகின்றனர். இத்தலத்தில் சித்தி விநாயகர் பசுவண்ணனாக கிழக்கு நோக்கி அமர்ந்து அருள்பாலிக்கின்றார்.
தகவல்: வி.பி. ஆலாலசுந்தரம், கோவை.
*சிறப்பம்சம்:*
அதிசயத்தின் அடிப்படையில்: ராவணனிடம் ஆத்ம லிங்கத்தைப் பறித்து பிரதிஷ்டை செய்ததால், இவரை வணங்கினால் சிவனையும் தொழுத பலனைப் பெறலாம்.
இது ஆன்மீக பூமி,
சித்தர்களும்,மகான்களும், முனிவர்களும்,யோகிகளும், நம்மை நல்வழி நடத்தும் மகா குருமார்களும், இன்னும் பிற தவஷ்ரேஷ்டர்களும், வாழ்ந்த, வாழ்ந்து கொண்டிருக்கும் மண்.
ௐ ஶ்ரீ மஹா கணபதயே நம:
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக