செவ்வாய், 27 ஆகஸ்ட், 2019

விநாயகர் பற்றிய அரிய தகவல்கள்




‘ஓம்’காரமான பிரணவத்தின் நாயகனாய் திகழ்பவர் விநாயகர். விநாயகரை பற்றிய சில அரிய வழிபாட்டு தகவல்களை அறிந்து கொள்ளலாம்.

விநாயகர் பற்றிய அரிய தகவல்கள்

ஐங்கரன்

பரம்பொருளான ஈஸ்வரன் செய்யும் தொழில்கள் ‘பஞ்சகிருத்யங்கள்’ எனப் பெயர் பெறும். அவை படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்பனவாகும். விநாயகர் நான்கு கரங்களுடன், தும்பிக்கை என்னும் ஐந்தாவது கரத்தையும் கொண்டுள்ளவர்.

அதனால் ‘ஐங்கரன்’ என்று பெயர் பெற்றார். நான்கு கால்களைக் கொண்ட பிராணிகள் முன்னங்கால்களையே, தம் கைகளாக பயன்படுத்துகின்றன. ஆனால் யானை மட்டும் இதில் விதிவிலக்கானது. யானையின் தும்பிக்கை, கையாகவும், மூக்காகவும், வாயாகவும் பயன்படுகிறது. விநாயகர் தன் நான்கு கரங்களில் அங்குசம், பாசம், எழுத்தாணி, கொழுக்கட்டை ஆகியவையும், ஐந்தாவது கரமாகிய தும்பிக்கையில் அமுத கலசமும் வைத்திருப்பார்.

இதில் எழுத்தாணி உலகை சிருஷ்டி செய்வதையும், கொழுக்கட்டை காத்தல் தொழிலையும், அங்குசம் அழித்தலையும், பாசம் மறைத்தலையும், தும்பிக்கையில் ஏந்தியிருக்கும் அமுதகலசம் அருளலையும் காட்டுகின்ற குறியீடுகளாகும்.

நர்த்தன விநாயகர்

விநாயகரது, நர்த்தனக் கோலம் (நடனமாடுவது) மிகவும் அபூர்வமான ஒன்றாகும். இப்படி ஒரு அபூர்வ கோலத்தை திருப்பூர் அருகேயுள்ள ஊத்துக்குளி பெரியநாயகி சமேத கயிலாயநாதர் கோவிலில் காணலாம். இந்த ஆலயத்தில் உள்ள விநாயகர் தனது வாகனமான மூஞ்சூறு மீது நடனமாடும் கோலத்தில் காட்சியளிக்கிறார்.

எனவே இவரை ‘நர்த்தன விநாயகர்’ என்று அழைக்கப்படுகிறார். விநாயகர் சன்னிதி முன் மூஞ்சூறு இருப்பது வழக்கம். ஆனால் ஊத்துக்குளி ஆலயத்தில் மூஞ்சூறு மீது விநாயகர் நடனமாடும் தோற்றம் என்பதால், அவரது சன்னிதிக்கு முன்பாக எலி வாகனம் இல்லை.

நவக்கிரக நாயகன்

‘ஓம்’காரமான பிரணவத்தின் நாயகனாய் திகழ்பவர் விநாயகர். இவரது உடலில் நவக்கிரகங்கள் அடங்கி இருக்கின்றன. விநாயகரின் நெற்றியில் சூரியன் அருள்கிறார்.

அதே போல் நாபியில் சந்திரனும், வலது தொடையில் செவ்வாயும், வலது கீழ் கையில் புதனும், வலது மேல் கையில் சனியும், தலையில் குரு பகவானும், இடது கீழ் கையில் சுக்ரனும், இடது மேல் கையில் ராகுவும், இடது தொடையில் கேதுவும் இடம்பெற்றுள்ளனர். எனவே விநாயகரை தரிசனம் செய்தாலே நவக்கிரகங்களையும் வழிபட்டு துதித்ததற்கான பலன் கிடைக்கும்.
 
நன்றி மாலைமலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக