கருட பஞ்சமி தினம் – இவற்றை செய்தால் அதிக பலன்கள் உண்டு
💐இறைவனின் பெயர்களை எப்போதாவது துதிப்பவர்களை விட அந்த இறைவனுக்கே சேவை செய்யும் பேறு பெற்றவர்களே அதிர்ஷ்டசாலிகள் ஆவர். சர்வ காலமும் பதினான்கு லோகங்களில் வசிக்கும் உயிர்கள் அனைத்திற்கும் படியளக்கும் தெய்வமாக இருப்பவர் திருமால். அந்த திருமாவிற்கு சேவகர்கள் பலர் இருந்தாலும் “பெரிய திருவடி” என்றும், “கருடாழ்வார்” என்றும் அழைக்கப்படும் கருட பகவானே முதன்மை சேவகர் மற்றும் சீடராக விளங்குகிறார். பெருமாளின் வாகனமாக கருடபகவானுக்குரிய ஒரு சிறப்பான நாள் தான் ஆடி மாதத்தில் வருகின்ற கருட பஞ்சமி தினம். அந்த கருட பஞ்சமி தினத்தில் நாம் செய்ய வேண்டியது என்ன என்பதையும், அதனால் நாம் பெறும் பலன்கள் எத்தனை என்பதையும் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
💐கருட புராணத்தின் படி கத்ரு எனப்படும் நாகங்களின் தாய்க்கும், கருட பகவானின் தாயான வினிதைக்கும் ஏற்பட்ட சவாலில் வினிதை தோற்றதால் கத்ருவுக்கு அடிமையாக சேவகம் செய்யும் நிலை ஏற்பட்டது. பாம்புகளின் தாயான கத்ரு, கருடனின் தாயான வினிதையை மிகவும் கீழ்த்தரமாக நடத்தியதால் கருடனுக்கு பாம்புகளின் மீது மிகுந்த கோபமும், வெறுப்பும் உண்டானது. தனது தாயின் அடிமைத்தளையை போக்க நினைத்த தனையனான கருடபகவான் கத்ருவிடம் சென்று தனது தாயை விடுவிக்குமாறு கூற, அதற்கு கத்ரு தேவலோகத்தில் இந்திரன் வைத்திருக்கும் இறவாவரம் தரும் அமிர்தம் நிறைந்த கலசத்தை கொண்டு வந்து தன்னிடம் கொடுத்தால், கருடனின் தாயை தான் விடுவிப்பதாக கூற, அதை ஏற்று கருட பகவான் தன் பலம் பொருந்திய சிறகால் பறந்து இந்திர லோகம் சென்று, இந்திரனிடமிருந்த அந்த அமிர்த கலசத்தை கவர்ந்து கொண்டு வந்து, கத்ருவிடம் கொடுக்க கத்ருவும் கருடனின் தாயான வினிதையை விடுதலை செய்தாள்.
💐இறவா வரமளிக்கும் தேவாமிர்தத்தை கருடபகவான் கவர்ந்து வந்தாலும், அதிலிருந்து ஒரு சொட்டை கூட தான் அருந்தாமல் தன் தாய் விடுதலை அடைவதற்காக அதை கத்ருவிடம் கொடுத்தார். கருடனின் இத்தகைய மனோதிடத்தையும், பராக்கிரமத்தையும் கண்டு வியந்த மகாவிஷ்ணு “உனக்கு என்ன வரம் வேண்டும்” என்று கருடனிடம் கேட்க, அதற்கு கருட பகவான் மகாவிஷ்ணுவான தங்களுக்கு வாகனமாக இருக்கும் பாக்கியம் வேண்டும் என்று கூற, அவ்வாறே மகாவிஷ்ணுவும் வரம் தந்தருளினார். அன்றிலிருந்து திருமாலின் வாகனமாக கருடபகவான் வலம் வருகிறார்.
💐கருட பஞ்சமி தினத்தன்று காலையில் எழுந்து குளித்து முடித்ததும் அருகிலுள்ள பெருமாள் கோவிலுக்கு சென்று கருட பகவான் சன்னதியில் தீபம் ஏற்றி வழிபட வேண்டும். முடிந்தால் கருட பகவானுக்குரிய மந்திரங்களை 9 முதல் 27 முறை வரை துதித்து வணங்குவது நல்லது. பின்பு பெருமாள் மற்றும் தாயாரை வணங்கி கோயிலை மூன்று முறை வலம் வந்து வீடு திரும்பலாம்.
💐கருட பஞ்சமி தினத்தில் பெருமாள் கோயிலுக்கு சென்று கருடாழ்வாரையும், பெருமாளையும் வழிபடுபவர்களுக்கு ஜாதகத்தில் இருக்கின்ற நாக சர்ப்ப தோஷங்களின் தீவிரத்தன்மை குறைந்து நற்பலன்கள் உண்டாகும். வீட்டில் விஷப்பாம்புகள், பூச்சிகள் போன்றவை நுழையாமல் தடுக்கும். கண் திருஷ்டிகள், துஷ்ட சக்தியின் பாதிப்புகள் போன்றவை ஒழியும். மனதிற்கினிய வாழ்க்கைத் துணை, நிறைவான செல்வம், புகழ் போன்றவை கிடைக்கப் பெறுவார்கள். உடலில் விஷ பொருட்களால் ஏற்பட்ட நோய் பாதிப்புகள் நீங்கி உடல் பழைய நிலையை அடையும். எதையும் சாதிக்கக் கூடிய தன்னம்பிக்கை மற்றும் மனோதிடம் உண்டாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக