வியாழன், 26 ஜனவரி, 2017

தை அமாவாசை...

தை அமாவாசை...

அமாவாசை தினங்கள் என்பது
மூதாதையர்களை வழிபடுவதற்குரிய
தினமாகவே கருதப்படுகிறது. அன்றைய தினம்
நம்முடைய முன்னோர்களின் பசியும், தாகமும்
அதிகரிக்கும் என்றும், அந்த பசியைப் போக்க
கறுப்பு எள் கலந்த தண்ணீரை தர்ப்பணம்
செய்ய வேண்டும் என்றும், அவ்வாறு
செய்தால் அவர்களின் பசி அடங்கி,
நமக்கு ஆசிகளை வழங்குவார்கள் என்றும்
சாஸ்திரங்கள் கூறுகின்றன. அமாவாசை
தோறும், ஒவ்வொரு வீட்டு
வாசலிலும், முன்னோர்கள் நின்று
கொண்டு எள் தண்ணீர்
பெறுவதற்காக காத்துக்
கொண்டிருப்பார்களாம்.
சூரியனும், சந்திரனும் இணையும் தினமே
அமாவாசை என்று அழைக்கப்படுகிறது.
அமாவாசை தினங்களில் தை அமாவாசை
சிறப்பு மிகுந்த தினமாக கருதப்படுகிறது.
இந்த நாளில் பித்ருக்களுக்கு தர்ப்பணம்
செய்வது மிகவும் நன்மை
அளிப்பதாகும். அன்றைய தினம் கடல், ஆறு
மற்றும் புண்ணிய நதிகளின் ஓரங்களில்,
இறந்த நம்முடைய முன்னோர்களுக்கு, தாய்,
தந்தையர்களுக்கு திதி
கொடுக்கலாம். அவ்வாறு திதி
கொடுப்பதற்கு, தமிழ்நாட்டில்
ராமேஸ்வரம், வேதாரண்யம், திருவையாறு
போன்ற தலங்களும், வடமாநிலங்களில்
காசி, திரிவேணி சங்கமம் ஆகிய இடங்களும்
சிறந்த இடங்களாக குறிப்பிடப்படுகின்றன.
திதி கொடுக்கும் அன்றைய தினம்,
சூரிய வழிபாடு செய்வது
அவசியமான ஒன்றாகும்.
இறந்தவர்களின் நாள்,தேதி
தெரியாதவர்களும், 12
அமாவாசையன்றும் திதி கொடுக்க
முடியாதவர்களும் தை, ஆடி மகாளய
அமாவாசை திதிகளில் திதி
கொடுத்தால் ஆண்டுதோறும் திதி
கொடுத்த பலன் கிடைப்பதாக
ஐதீகம்.
நமது முன்னோர்களின் திசையாக தெற்கு
உள்ளது. புரட்டாசி மாதம்
பெருமாளுக்கு உகந்தது. அந்த
மாதத்தில் பெருமாள், பித்ரு லோகம்
செல்வார். அங்குள்ளவர்கள்
அனைவரும், பெருமாளுக்கு பாதபூஜை
செய்துவழிபடுவார்கள். இந்தப்
பூஜையின் போது மகாவிஷ்ணு உடல்முழுவதும்
எள் தானியம் நிறைந்து காட்சியளிப்பார்.
முன்னோர்களின் ஆராதனையை மகிழ்ச்சியுடன்
ஏற்றுக்கொள்ளும் பெருமாள்,
அவர்களுக்கு பூஜை செய்ததற்கான
பலன்களை வழங்குவார். இந்த பலன்களை
பித்ருக்கள் மூலம் பூமியில் வாழும்
அவர்களது உறவினர்களும்
பெறுவார்கள்.
பின்னர் பித்ருக்களை 15 நாட்கள் பூலோகத்துக்கு
சென்று உங்கள் குடும்பத்தினருக்கு
பலன்கள் கொடுத்து வாருங்கள்
என்று கூறி அனுப்பி வைப்பார்.
இதைத்தொடர்ந்து நமது முன்னோர்கள்
அவர்கள் உறவினர் குடுபத்தைக்காண
ஆசையுடனும் மகிழ்ச்சியுடனும் பூமியை நோக்கி
புறப்படுவார்கள். மகாளய
அமாவசையன்று அனைவரும் கூடுகின்றனர்.
அந்த நேரத்தில் நாம் அவர்களை வணங்கி
முனோர்களை திருப்தி செய்யும் வகையில்
தர்ப்பணம் செய்வது அவசியம். ஆடி
அமாவாசையன்று மூதாதையர்களை
வரவேற்கும் நாம் தை அமாவாசையன்று
விடைகொடுத்து அனுப்புகிறோம்.
இந்நாளில் தீர்த்த தலங்களுக்கு
சென்று எள், தண்ணீர் இறைத்து
அவர்களின் தாகத்தை தீர்க்கவேண்டும்.
இவ்வாறு செய்தால் அவர்கள்
செய்த பாவங்கள் நீங்கி, அவர்
களுக்கு முக்தி பேறு கிடைக்கும். மேலும் அன்றைய
தினம் ஏழை எளியவர்களுக்கு அன்னதானம்,
துணி தானம் செய்யவேண்டும். மறைந்த
தாய், தந்தை படங்களுக்கு வீட்டில் மாலை
அணிவித்து அவர்களுக்கு பிடித்தமான
உணவுகளை படைத்து வணங்க வேண்டும்.
நம் முன்னோர்கள், காகத்தின் வடிவில்
வீட்டிற்கு வருவதாக ஐதீகம். அதனால்
காகத்துக்கு உணவு அளிப்பது முக்கியம்.
அன்று காலை ஆறு, கடல் போன்ற நீர்
நிலைகளுக்கு சென்று நீராடி தர்ப்பணம்
கொடுக்க வேண்டும். காலை 6.30
மணிக்குள் தர்ப்பணம் கொடுப்பது
நல்லது. ராகுகாலம், எமகண்டம்
ஆகியவை தர்ப்பணத்துக்கு
பொருந்தாது. மதிய வேளை
தர்ப்பணம் செய்ய மிகவும் உகந்தது.
தர்ப்பணம் கொடுக்கும்போது
தங்களின் கோத்திரம், குலதெய்வம்,
மூன்று தலைமுறையின் பெயர்களை அறிந்து
கொள்வது அவசியம். தர்ப்பணம்
செய்தபின்னர் வீட்டுக்கு திரும்பி வந்து
மறைந்த முன்னோர்களின் படத்தை சுத்தம்
செய்து, வடக்கு கிழக்கு திசையில் வைத்து
சந்தனம், குங்குமம் இட்டு துளசி மாலை
சாத்த வேண்டும். முன்னோர்கள்
பயன்படுத்திய பொருட்களை வைத்து
குத்து விளக்கு ஏற்ற வேண்டும்.
முன்னோர்களுக்கு பிடித்தமான இனிப்பு,
காரம், பழ வகைகளை படைக்க வேண்டும். கோதுமை
தவிடு, அகத்திக்கீரை போன்றவற்றை முன்தினமே
ஊறவைத்து பசுவிற்கு தானமாக வழங்க
வேண்டும். முன்னோர்களுக்கு தர்ப்பணம்
செய்து முடிக்கும் வரை, வீட்டில்
தெய்வ சம்பந்தமான பூஜைகளை
ஒத்திவைப்பது நல்லது. தர்ப்பணம்
செய்து முடிந்த பின்னர் தினசரி
செய்ய வேண்டிய பூஜைகளை
செய்யலாம்.
அமாவாசை அன்று ஒவ்வொரு
வீட்டு வாசலிலும் அந்தந்த வீட்டு பித்ருக்கள்
வந்து நின்று கொண்டிருப்பார்கள்.
அவர்களுக்கு எள் கலந்த தண்ணீரை
தரவேண்டும். இதனால் அவர்கள்
மன்மகிழ்ந்து ஆசீர்வதிப்பர். இவ்வாறு
செய்யாவிட்டல் ஒருசில பித்ருக்கள்
கோபத்துடன் சாபம் தந்துவிட்டு
செல்வதாகவும் கூறப்படுகிறது. ஆகவே
தவறாது சிரார்த்தம் தர்ப்பணம்
செய்ய வேண்டும். தமிழ் மாத
பிறப்பன்று பித்ருக்களை வழிபட்டு சூரியனை
வணங்க வேண்டும். நம் பித்ருக்கள் சக்தி
நிறைந்தவர்கள். அவர்கள்
ஆசீர்வாதத்தால் புண்ணியமும்
செல்வமும் கிடைக்கும்.
அமாவாசை தினங்களில் மாமிசம்
சாப்பிடக்கூடாது. வெங்காயம்,
பூண்டு ஆகியவற்றை தவிர்க்க வேண்டும்.
தர்ப்பணம் செய்யும் போது கறுப்பு எள்ளை,
மற்றவர்களிடம் இருந்து கடன்
வாங்கக்கூடாது.
நீரில் இருந்து கொண்டு கரையில்
தர்ப்பணம் செய்யக் கூடாது. அதைப்போல்
கரையில் இருந்து கொண்டு நீரிலும்
தர்ப்பணம் செய்யக்கூடாது.
தர்ப்பணத்தை எப்போதும் கிழக்கு முகமாக
பார்த்தபடி தான் கொடுக்க
வேண்டும்.

************************************
இறந்த நம் முன்னோர்களுக்குச் சிரத்தையுடன்
செய்யும் காரியமே சிராத்தம்.
சாதத்தைப் பிடித்து ஆறு பிண்டங்கள் வைத்து,
எள், ஜலம், தர்ப்பை கொண்டு
அவர்களை ஆராதிக்க வேண்டும். தந்தை,
தாத்தா, முப்பாட்டன்கள், தாய், பாட்டி,
கொள்ளுப் பாட்டி ஆகிய கோத்திர
தாயாதிகளுக்கு ஒவ்வொருவரும்
செய்யவேண்டிய மிக முக்கிய கடமையாகும்
இது. இந்த ஆறு பிண்டங்களையும் ஒன்றாக
இணைத்து காகத்துக்கு வைக்கும்போது, அது
உண்ணுவதன் மூலம் நம் முன்னோர்களுக்கு
அந்த ஆகாரம் செல்வதாக ஐதீகம்!
சிராத்தம், தர்ப்பணம் செய்கிற
நாட்களில், வீட்டு வாசலில் கோலம்
இடக்கூடாது. பூஜையறையில் தீபம்
ஏற்றக்கூடாது. அதேபோல், சிராத்தம் அல்லது
தர்ப்பணம் செய்யும் முன்பு ஆண்களும்
சரி, பெண்களும் சரி, நெற்றிக்கு
இட்டுக்கொள்ளக் கூடாது. இவை,
இறைவனை வழிபட நாம் செய்யும்
காரியங்கள். பித்ருக்கள் வரும் நேரத்தில், இறை
தொடர்புடைய இந்தக் காரியங்களைச்
செய்வதைத் தவிர்க்க வேண்டும். காரணம்,
தெய்வத்தை வழிபடும் வேளையில், பித்ருக்கள்
வரப் பயப்படுவார்கள் என்கிறது சாஸ்திரம்.
ஒவ்வொரு மாதமும் அமாவாசை
நாளில்தான் தர்ப்பணம் செய்ய
வேண்டும்.  நம் முன்னோர் எந்தத் திதியில்
இறந்தார்களோ, அந்தத் திதி மற்றும் அந்த
பட்சம், அந்த மாதம் ஆகியவற்றில்
சிராத்தம் செய்ய வேண்டும். இறந்த
நாளில் செய்ய வேண்டிய சிராத்தத்தை
ஒரு சிலர், இறந்த நட்சத்திரத்தில்
செய்கிறார்கள். அதைத் தவிர்ப்பது
உத்தமம். ஏனென்றால், அன்றைய தினம்
திதி மாறி வர வாய்ப்பு உள்ளது.
அதனால், இறந்த திதியில் சிராத்தம்
செய்வதே சிறப்பு!
மனிதர்கள் தாம்
வாழும் காலத்தில்,
தான தருமங்கள்
செய்து வருதல்
வேண்டும். நம்மைப்
பெற்ற தாய்,
தகப்பன் உயிருடன்
இருக்கும் காலத்தில்,
அவர்களின் மனம் நோகாமல் நடந்து
கொள்வதே மிகப் பெரிய தர்மம்
ஆகும். இறந்த பின்பு செய்கின்ற
தானத்தைவிட, இருக்கும்போது அவர்களுக்கு
மூன்று வேளையும் நல்ல ஆகாரம்
கொடுப்பதே மிகப் பெரிய தர்மம்
என்கிறது  கருடபுராணம்.
பாபம் என்றால் என்ன, அது யாரைச் சேரும்
என்பதைப் பற்றி நமது வேதங்களும்,
உபநிஷத்துகளும் விரிவாகச்
சொல்லியிருக் கின்றன.
பொய் பேசுதல், பிறர் பொருளை
அபகரித்தல், அல்லது அபகரிக்க நினைத்தல்
போன்றவை தீய காரியங்களாகும். இவை
எல்லாமே பாபம் என்று கருடபுராணம்
சொல்கிறது.
சிராத்தம், தர்ப்பணம், பித்ரு காரியம்,
படையல் என்றெல்லாம் பல்வேறு
வார்த்தைகள் புழக்கத்தில் இருந்தாலும், அவை
அனைத்தும் ஒன்றையே குறிப்பன ஆகும். நதிகள்
பல இடங்களில் உற்பத்தியாகி, பல
ஊர்களின் வழியாக வரும்போது, அவை ஆறு
என்று பெயர் பெற்று சமுத்திரத்தில்
கலக்கின்றன. அதுபோல், நாம் செய்கிற
சிராத்தம், ஒவ்வொரு வருடமும் நம்
முன்னோர் இறந்த திதியில் செய்யப்படுவது.
தர்ப்பணம் என்பது ஒவ்வொரு
அமாவாசை அன்றும் செய்யப்படுகிறது.
படையல் என்பது . வருடத்துக்கு ஒருமுறை
செய்யப்படுவது. ஆனால் இவை
அனைத்துமே இறந்த முன்னோர்களுக்காகச்
செய்யப்படுகிற சடங்குகள். இவை நம்
முன்னோர்களைச் சென்றடைந்து, அவர்களின்
ஆத்மாக்களைக் குளிர்வித்து, நமக்கு
அவர்களின் ஆசிகளைப் பெற்றுத் தரும்
என்பது சத்திய வாக்கு.
நவீன உலகம், விஞ்ஞான யுகம், கணினி
யுகம் என்று காலம் வேகமாக மாறிவிட்டது.
'என் வாழ்க்கையே இயந்திரமயமாகிவிட்டது.
தர்ப்பணம் செய்யவே நேரம் இல்லை’ என்று
அங்கலாய்க்கிறார்கள் பலர். மாதத்தில்
ஒரே ஒருமுறை வருகிற அமாவாசைக்கே இப்படிச்
சொல்கிறார்கள். ஆனால்,
வருடத்துக்கு 96 முறை தர்ப்பணம் செய்ய
வேண்டும் என்கிறது வேதம். ஆகவே, எந்தச்
சாக்குப் போக்கும் சொல்லாமல்,
தட்டிக் கழிக்காமல் முன்னோரை உரிய
காலத்தில் வழிபடுவது நமக்கு நன்மை பயக்கும்
என்பதை மறந்து விடாதீர்கள்.
இவை அனைத்தையும்
செய்ய முடியவில்லை
என்றாலும், ஆடி மாத
அமாவாசை தர்ப்பணமும்,
தை மாத அமாவாசை
தர்ப்பணமும் அவசியம்
செய்ய வேண்டும்.
ஒவ்வொரு
வருடமும்
செய்யவேண்டிய
சிராத்தம் விட்டுப்போனால்
(தீட்டு ஏற்படுவதால்) மஹாளயபட்சம்
அன்று தர்ப்பணம் செய்ய வேண்டும்.
இந்தப் புனிதமான தர்ப்பணங்களை
உத்தராயன, தட்சிணாயன காலங்களில்
செய்யாமல் இருந்தால், குழந்தையின்மை,
கருக்கலைவு, குடும்பத் தகராறு, ஆரோக்கியக்
குறைபாடு, அகால மரணம், திருமணத் தடை,
தீய பழக்கங்கள், ஊனமுற்ற குழந்தைப் பிறப்பு,
மூளை வளர்ச்சிக் குறைவுள்ள குழந்தைப் பிறப்பு
போன்ற விரும்பத்தகாத சம்பவங்கள்
குடும்பத்தில் நடைபெற்று, நம் நிம்மதியைக்
குலைத்துவிடும் என்கிறது சாஸ்திரம். இவை பித்ரு
தோஷம், மாத்ரு தோஷம், நாதி தோஷம், பந்து
தோஷம், புத்ர தோஷங்களாகத் திகழ்கின்றன.
இவை முறையற்ற வாழ்க்கை, தேவையற்ற கோபம், மன
உளைச்சல், மன அழுத்தம், தற்கொலைச்
சிந்தனை, உடல்வலி போன்றவற்றை உருவாக்கி,
நிம்மதியற்ற வாழ்க்கையைத் தந்துவிடும்.
ஆத்மகாரகனாகிய சூரியனும், மனோகார
கனாகிய சந்திரனும் ஒவ்வொரு
மாதமும் ஒரு ராசியில் இணைவார்கள்.
இதையே அமாவாசை என்கிறோம். சூரியன் என்பதை
பித்ருகாரகன் என்றும், சந்திரன் என்பதை
மாத்ருகாரகன் என்றும்
சொல்கிறது ஜோதிடம். ஆகவே சூரியன்,
சந்திரன் இணைகிற  அமாவாசையில்,  இறந்த
தாய், தந்தை மற்றும் பித்ருக்களுக்கு தர்ப்பணம்
கொடுத்து ஆராதிப்பது சிறப்பு
என்கிறது சாஸ்திரம்.
கிட்டத்தட்ட, நம் மூன்று தலைமுறையில் உள்ள
முன்னோருக்குச் செய்கிற ஆராதனை,
நம்மையும் நம் சந்ததியையும் இனிதே வாழ
வைக்கும் என்கிறது கருடபுராணம்.
தை அமாவாசை நாளில், அந்தப் புண்ணிய
தினத்தில், நம் முன்னோருக்குச் செய்யும்
கடமைகளைக் குறைவறச் செய்வோம். நம் குலம்
தழைத்து, வாழையடி வாழையாய் வளமுடன்
வாழ்வோம்!
************************************

தை மாதத்தில் (தமிழ் மாதம்) மகர
ராசியில் சஞ்சரிக்கும் சூரியன்; சந்திரன்,
பூமி ஆகிய மூன்றும் ஒரு நேர் கோட்டில் (0
பாகையில்) அமையும் தினமே தை அமாவாசை
திதியாக அனுஷ்டிக்கப் பெறுகின்றது.
இந் நிகழ்வு இவ் வருடம் 27.01.2017
வெள்ளிக்கிழமை அமைவதாகவும்
சோதிடம் கணிக்கின்றது.
வானவியல் கணிப்பின் படி பூமியை
சந்திரன் வலம்-சுற்றி வருவதும் பூமியும்
சந்திரனும் இணைந்து சூரியனை வலமாக
சுற்றி வருவதும் நிரூபிக்கப்பெற்ற
உண்மைகள்.
சூரிய பகவான் ஆண்மை, ஆற்றல், வீரம்
என்பவற்றை எல்லாம் எமக்குத்
தரவல்லவர். சந்திரன் எமது மனதுக்கு
அதிபதியானவர். இதனால் மகிழ்ச்சி,
தெளிவான தெளிந்த அறிவு,
இன்பம், உற்சாகம் என்பவற்றை
எல்லாம் தரவல்லவர்.
சூரியனைப் "பிதிர் காரகன்" என்றும்,
சந்திரனை "மாதுர் காரகன்" என்றும்
சோதிடம் கூறுகின்றது. அதனால் சூரியனும்
சந்திரனும் எமது பிதா, மாதாவாக
வழிபடும் தெய்வங்களாக
இந்துக்கள் கருதுகின்றனர்..
இத்தகைய பெருமைகளை எல்லாம்
தருகின்ற சூரிய, சந்திரனை தந்தை, தாய்
இழந்தவர்கள் அமாவாசை, பூரணை
தினங்களில் வழிபடுகின்றனர்.
தந்தையை இழந்தவர்கள் அமாவாசை
தினத்திலும் , அன்னையை இழந்தவர்கள்
பூரணை தினத்திலும் வழிபடுவது புராதன
காலம் தொட்டு பின்பற்றிவரும்
ஒரு வழக்கமாகும்.
அமாவாசைத் திதி, மாதா மாதம்
நிகழ்ந்தாலும் அவற்றுள் தைமாதத்திலும்,
ஆடி மாதத்தில் வரும் அமாவாசைத்
திதிக்கு அதிக சிறப்பு உண்டு.
இந்துக்கள் ஒரு வருடத்தை இரண்டு
அயனங்களாகப் பிரித்துள்ளனர். தை முதல்
ஆனி வரை உள்ள ஆறு மாதம்
உத்தராயண காலம் என்றும், ஆடி
முதல் மார்கழி வரை உள்ள காலம்
தட்சணாயன காலம் என்றும் அழைப்பர்.
உத்தராயண கால ஆரம்ப மாதமாக
தை மாதம் வருவதால் தை
அமாவாசையும், தட்சணா கால
ஆரம்ப மாதமாக ஆடி மாதம்
வருவதால், ஆடி மாதத்தில் வரும்
அமாவாசைத் திதி பிதுர் வழிபாட்டிற்கு
புண்ணியமான தினம் என சாஸ்திர
நூல்கள் கூறுகின்றன.
இந்துக்களின் நம்பிக்கை
பிதிர் தேவர்களை சிரத்தையோடு வழிபாடு
செய்து சிரார்த்தம்
செய்வதால் பிதிர்களின்
தோஷங்களில் இருந்து தோஷ நிவர்த்தி
பெறலாம் என்பதும், பிதிர் கடன்
செய்வதனால் அவர்களின்
ஆசீர்வாதம் கிடைக்கப் பெறும்
என்பதும், பிதிர் கடன் செய்யாது
விடின் பிதிர் தேவர்கள் சபித்து விடுவார்கள்
என்பதும் இந்துக்களின் நம்பிக்கை.
அமாவாசை, பெளர்ணமி ஆகிய
இரண்டு விரதங்களும் முறையே காலமான
தந்தை, தாய் ஆகியோரைக் குறித்து அவர்களின்
(சந்ததியினரால்) பிள்ளைகளால்
அனுட்டிக்கப்படும் விரதங்கள் ஆகும்.
ஒவ்வொரு மாதத்திலும் இந்த
விரதங்களுக்குரிய தினங்கள் வருகின்றன.
இவ்விரதங்களை அனுஷ்டிப்பவர்கள்
ஆசார சீலர்களாக உபவாசம்
இருந்தும் அவ்வாறு இருக்க இயலாதவர்
ஒரு பொழுது உண்டும்
அனுஷ்டிப்பர்.
குறிப்பாக இலங்கை வாழ் தமிழ் சைவ
மக்களில் பலர் போர்க்கால சூழலில் தம்
பெற்றோரை இழந்ததும்; அவர்களுக்குரிய
இறுதிக் கிரியைகளை செய்ய
முடியாதவர்களாகவும், மேலும் சிலர்
வெளிநாடுகளில் வசிப்பதனால்
பெற்றோரின் இறுதிக் கடன்களை
செய்ய முடியாது தவற
விட்டவர்களாகவும் இருக்கலாம்.
அப்பா, அம்மா உறவுகள் என
அனைவர்க்கும் நீத்தார் கடன்
செய்யத் தவறியவர்கள்,
சந்தர்ப்பவசத்தால் செய்ய
முடியாதவர்கள், ஒவ்வொரு
வருடமும் தை அமாவாசை, சித்திரா
பௌர்ணமி, ஆடி அமாவாசை போன்ற பிதிர்
திதிகளில் விரதம் அனுஷ்டித்து தர்ப்பணம்
செய்தல் அவசியமாகும்.
இத்தினத்தில் புண்ணியத் தீர்த்தங்களில்
நீராடித் தூய்மையாராய் பிதிர்,
தருப்பணம் செய்தும் பிண்டதானம்,
சிரார்த்தம் செய்தும் இறைவனை
வழிபட்டும் அந்தணர்களுக்குத் தானமும்,
விருந்தினர், சுற்றந்தார், ஏழைகள்,
ஆதரவற்றோர் ஆகியோருக்கு உணவும்
அளித்தும் அவர்களுடன் போசனம்
செய்து விரதக் கொள்கையுடன்
இருப்பர்.
இறந்த தந்தை, தாயார் நற்கதி அடைதற்
பொருட்டும், பிதிகளாக எம்மைச்
சுற்றும் அவர்களை மகிழ்வித்து அவர்களின்
ஆசி பெறவும் அமாவாசை,
பெளர்ணமி நாட்களில் பிள்ளைகள்
விரதங்களை அனுஷ்டிக்கிறார்கள்.
பிதிர்கள் மகிழ்வுற்றால் அம்மனை சிறக்கும்
என்பது ஐதீகம்.
யாழ்ப்பாணத்தில் சிறப்பான
நாட்கள் (கனத்த நாட்கள்) என
அழைக்கப்படும் விளக்கீடு, தீபாவளி போன்ற
தினங்களில் "வீட்டுக்குப் படைத்தல்" என்னும்
நிகழ்வு வழக்கத்தில் உள்ளது. அண்மையில்
யாரவது அந்த வீட்டில் இறந்திருந்தால்
தவறாது வீட்டுக்குப் படைத்து பிதிர்களை
மகிழ்விப்பர்.
சித்திரை மாதத்தில் வரும்
பெளர்ணமியும், ஆடி, தை
மாதங்களில் வருகின்ற அமாவாசையும்
சிறப்புப் பொருந்தியன என்று சைவ
நுல்கள் கூறுகின்றன.
அவரவர் தந்தை, தாயார் இறந்த
திதிகளைத் தவற விட்டவர்கள் ஆடி
அமாவாசை தினத்தில் தந்தையை நோக்கியும்,
சித்திரைப் பெளர்ணமி தினத்தில்
தாயின் பொருட்டும் சிராத்தம்,
தருப்பணம், பிண்டதானம் என்பவற்றைச்
செய்வர்.
யாழ்ப்பாண மக்கள் புரதான காலம்
தொடக்கம் கீரிமலை
நகுலேஸ்வரத்திலும் (கீரிமலைக் கேணி, கடல்),
திருவடிநிலை தீர்த்தக் கரையில்
தீர்த்தமாடியும்; மட்டக்களப்பு வாழ்
மக்கள் மாமாங்கப் பிள்ளையார் கோவில்
அமிர்தகழியில் தீர்த்தமாடியும்;
திருகோணமலை வாழ் மக்கள் கோணேஸ்வரர்
ஆலய தீர்த்தக் கரையில் தீர்த்தமாடியும்;
மன்னார் வவுனியா மக்கள்
திருக்கேதீஸ்வரம் பாலாவியில்
தீர்த்தமாடியும்; கொழும்பு வாழ்
மக்கள் மோதர-முகத்துவாரம்-கடலில்
தீர்த்தமாடியும் தம் முன்னோருக்கு
தர்ப்பணம் செய்து பிதிர் கடன்
செலுத்தி வருகின்றனர்.
இரு வேறு சக்திகளான சூரியன், சந்திரன்
ஒன்றாக இணையக் கூடிய நாளே
அமாவாசையாக
கொள்ளப்படுகிறது. எல்லா
திதியிலும், ஏதாவது ஒரு கிரகம் திதி தோஷம்
(வலுவிழப்பது) அடையும். ஆனால்
அமாவாசை தினத்தன்று எந்தக் கிரகமும்
திதி தோஷம் பெறுவதில்லை.
இதன் காரணமாக அமாவாசை
திதியில் சில விடயங்கள்
மேற்கொள்ளப்பட்டால்
குறிப்பிடத்தக்க வெற்றியை அடைய
முடியும். மருந்து உண்ணுதல், நோயாளிகள்
குளித்தல் உள்ளிட்ட பல விடயங்களை
அமாவாசை திதியன்று துவங்கலாம்
என சித்த நூல்கள் கூறுகின்றன.
எந்த ஒரு பரிகாரமாக இருந்தாலும்
அமாவாசையன்று செய்தால்
அதற்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும்.
ராகு-கேது பரிகாரம், சர்ப்பதோஷம், சனி,
செவ்வாய் கிரகங்களால்
ஏற்படக்கூடிய பிரச்சனைகள், களத்திர
தோஷம், மாங்கல்ய தோஷம் இந்த
மாதிரியானவற்றிற்கு அமாவாசை
திதியன்று பரிகாரம் செய்வது
நல்லது.
சங்க காலத்திலும் இதுபோன்ற
விடயங்களும் நடைமுறையில் இருந்துள்ளது.
முன்னோருக்கு திதி செய்வது, தர்ப்பணம்,
ஆற்றில் புனித நீராடுவது போன்றவை
அமாவாசை தினத்தில்
மேற்கொள்ளப்பட்டதை சங்க கால
நூல்களும் உறுதி செய்துள்ளன.
மனிதப் பிறவி மகத்தான பிறவி.
மனிதனாகப் பிறந்தால் தான்,
இறைவனை எளிதில் அடைய முடியும். வேறு எந்தப்
பிறவிக்கும், இந்த சிறப்பு கிடையாது.
வானுலகில் தேவராக இருந்தாலும் கூட,
இறைவனைத் தரிசிக்கத்தான் முடியுமே ஒழிய,
அவரோடு இரண்டறக் கலக்க முடியாது.
ஆக, இத்தகைய அரிய மானிடப்பிறவியைத்
தந்த நம் முன்னோருக்கு, நன்றி
தெரிவிக்க வாரிசுகள் நடத்தும் ஒரு
விழாவாக அமாவாசை, பௌர்ணமியை
எடுத்துக் கொள்ளலாம்.
சூரியனின் வடக்கு திசை பயணம் துவங்கும்
உத்ராயண காலத்தின் துவக்கமான
தை மாதம், மிகவும் புனிதமானது. அந்த
மாதத்தில் வரும் அமாவாசையில்,
கடற்கரை தலங்களுக்குச் சென்று,
முன்னோருக்கு தர்ப்பணம் செய்து
வணங்குதல் மானிடராக பிறந்த
ஒவ்வொருவரினது ஆன்மீகக்
கடமையாகும்.
சுமங்கலிப் பெண்கள் (கணவன்
வாழ்ந்து கொண்டு
இருப்பதால்) தனது தந்தைக்கான பிதிர்
தர்பணம் செய்வது வழக்கத்தில் இல்லை.

நன்றி தினத்தந்தி.விகடன். பணிப்புலம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக