ஞாயிறு, 8 ஜனவரி, 2017

திருவாதிரை  கொண்டாட்டம் ஏன்?

ஆடல் காணீரோ: ஆருத்ரா தரிசனம்!- (11-01-2017)

திருவாதிரை  கொண்டாட்டம் ஏன்?

மார்கழி மாதம் திருவாதிரையன்று ஆருத்ரா தரிசனம் நிகழ்ச்சி நடக்கிறது. நடராஜரின் திருநடனம் புரியும் கோயில்களில் இந்த விழா சிறப்பு. ஏன் தெரியுமா?

சேந்தனார் என்னும் சிவபக்தர், தில்லையம்பலமான சிதம்பரத்தில் தன் மனைவியுடன் வாழ்ந்து வந்தார். சிவனடியார்கள் வந்தால் அவர்களின் மனம் கோணாமல் உபசரிப்பார். ஒருமுறை, அவ்வூரில் பலத்த மழை பெய்து விறகெல்லாம் நனைந்து விட்டது. அங்கு வரும் அடியவர்களுக்கு சமைத்துக் கொடுப்பதில் பிரச்னை ஏற்பட்டது. இந்த நேரத்தில் யாராவது வந்து விட்டால் அவர்களுக்கு அமுது படைப்பது எப்படி என்று கவலையில் இருந்தபோது, ஒரு சிவனடியார் வந்து சேர்ந்தார். இவர் தேஜசாக ஜடாமுடி தரித்துக் காணப்பட்டார். தம்பதிகளுக்கு கை, கால் உதறியது. ஈரவிறகால் சாதம் சமைப்பது எப்படி என்று யோசித்துக் கொண்டிருந்தார் சேந்தனாரின் மனைவி. இருந்தாலும், எப்படியோ ஒருவாறாக ஊதி நெருப்பு பற்றவைத்தார். அரிசியை மாவாக்கி, உளுந்து சேர்த்து வெல்லமும் நெய்யும் கலந்து களி தயாரித்துவிட்டார்.

அதை சிவனடியாருக்கு படைத்தார். அன்றைய தினம் மார்கழி பவுர்ணமி. திருவாதிரை நட்சத்திரம்.  வந்தவர் அதைச் சாப்பிட்டுவிட்டு, இத்தனை சுவையான களியை தன் வாழ்நாளிலேயே சாப்பிட்டதில்லை என்று சொல்லி மகிழ்ந்தார்.

*“தினமும் தயிர்ச்சாதமும், புளி சாதமும், சர்க்கரைப் பொங்கலும் சாப்பிட்டுப் பழகிப்போன எனக்கு தாங்கள் அளித்த களி மிகப் பிரமாதம்!”* என்றார். தம்பதியர் ஆனந்தம் கொண்டனர். மறுநாள் காலையில் அவர்கள் தில்லையம்பலம் நடராஜரைத் தரிசிக்கச் சென்றனர். கோயில் நடையெல்லாம் அவர்கள் தயாரித்த களி கொட்டிக் கிடந்தது. நடராஜரின் வாயில் சிறிதளவு களி ஒட்டியிருந்தது. தங்கள் வீட்டிற்கு எழுந்தருளியிருந்தது நடராஜரே என்பதை உணர்ந்து உடல் புல்லரித்துப் போயினர். நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்கினர். அன்றுமுதல் நடராஜப் பெருமானுக்கு திருவாதிரை நாளில் களியமுது படைக்கும் பழக்கம் உருவாயிற்று. திருவாதிரை நாளன்று விரதம் இருப்பது மிகவும் சிறந்தது.  அன்று சிறிதளவு களி மட்டும் சாப்பிடலாம்.

மற்றபடி உணவேதும் உட்கொள்வது கூடாது. அதிகாலை 3 மணிக்கே எழுந்து, குளிர்ந்த நீரில் நீராடி, உங்கள் ஊரிலுள்ள சிவாலயத்தில் உள்ள நடராஜர் சந்நிதியில் நடைபெறும் திருவாதிரை அபிஷேகத்தை காலை 4 மணிக்கு கண்டு களிக்கலாம். *”ஆதிரை’* என்ற பெண்மணி திருமணத்தன்றே கணவனை இழந்தாள். அவள் சிவனிடம் வேண்டி, கணவனின் உயிரை மீட்டாள். அவளது பெயராலேயே *“திருவாதிரை’* விழா உண்டானதாக கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு கதை வழங்கப்படுகிறது.

திருவாதிரை நாளில் நடராஜர் நடனம் கண்டு, வாழ்வில் செல்வம் பெறுவோம்.

🅱 *தென்னக நடராஜர்கள்:*🅱

சிதம்பரம் நடராஜர் சிலை எப்படி இருக்கிறதோ, அதற்கு சற்றும் மாறாமல் நான்கு சிலைகள் அக்காலத்தில் வடிவமைக்கப்பட்டன. அவற்றைக் காண, திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள *செப்பறை, கரிசூழ்ந்தமங்கலம், கருவேலங்குளம்,* தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள *கட்டாரிமங்கலம்* கோயில்களுக்கு செல்ல வேண்டும்.

இந்த நான்கு கோயில்களுக்குமே ஒரே வரலாறு தான்.

உத்தரதேச மன்னன் சிங்கவர்மன், கொடுங்கோல் ஆட்சி செய்தான். பிற்காலத்தில் மனம் திருந்தி தவமிருக்க காட்டிற்குச் சென்றான். அந்த காட்டில் வியாக்ரபாதரும், பதஞ்சலி முனிவரும் தவம் புரிந்து கொண்டிருந்தனர். அவர்களுக்கு இறைவன் திருநடனக்காட்சி அருளினார். அந்தக்காட்சியை சிங்கவர்மனும் கண்டான். முனிவர்களின் அறிவுரைப்படி நடராஜருக்கு சிதம்பரத்தில் கோயில் எழுப்பினான். நடராஜர் சிலை செய்யும்படி சிற்பிகளை பணித்தான்.

அவர்கள் தாமிரத்தால் ஒரு சிலையை செய்தனர். அதைப்பார்த்த அரசன் தாமிர சிலையே இவ்வளவு அழகாக இருக்கிறது என்றால், தங்கத்தால் செய்தால் எப்படி இருக்கும் என எண்ணிப்பார்த்தான். தலைமை சிற்பியான நமச்சிவாய முத்து ஸ்தபதியிடம் ஏராளமான பொன் கொடுத்து சிலை செய்ய உத்தரவிட்டான். சிலை தயாரானது. ஆனால், அது தாமிரமாக மாறிவிட்டது. சிற்பிக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. மன்னனுக்கு தகவல் சென்றது. அவன் சிற்பியை சிறையில் அடைத்தான். அன்றிரவு மன்னனின் கனவில் தோன்றிய சிவன், தான் தங்கமாக இருக்க விரும்பவில்லை என்றும், எனவே தாமிர சிலையாக மாறியதாவும் கூறினார். இதையடுத்து சிற்பி விடுதலை செய்யப்பட்டார். இதையடுத்து, அந்த சிலையை சிதம்பரம் கோயிலில் அமைத்தனர். முதலில் செய்யப்பட்ட தாமிர சிலையை சிவனின் உத்தரவுப்படி தென்புறத்திற்கு நமச்சிவாய ஸ்தபதி தூக்கி வந்தார். எந்த இடத்தில் சுமை அதிகமாகிறதோ, அங்கே வைத்துவிட வேண்டும் என் சிவன் சொல்லியிருந்தார். தாமிரபரணி கரையில் செப்பறை என்ற இடத்திற்கு வரும் போது சிலை கனத்தது. அந்த இடத்திலேயே சிலையை வைத்துவிட்டார்.

ராமபாண்டியன் என்ற மன்னன் அவ்விடத்தில் ஒரு கோயில் கட்டினான். நடராஜருக்கு தனி சந்நிதி அமைத்தான்.

ராமபாண்டியனின் எல்லைக்குட்பட்ட பகுதியை ஆண்ட சிற்றரசனான வீரபாண்டியன், செப்பறையில் இருந்த நடராஜர் சிலையைக் கண்டான். அதேபோல் தனக்கும் இரண்டு சிலைகள் வேண்டும் என ஸ்தபதியிடம் கூறினான். சிலை செய்யும் பணி துவங்கியது. இதில் ஒன்றை கட்டாரிமங்கலத்தில் உள்ள கோயிலிலும், மற்றொன்றை கரிசூழ்ந்த மங்கலத்தில் உள்ள கோயிலிலும் வைக்க எண்ணினான். சிலை செய்யும் பணி முடிந்தது. சிலைகளின் அழகைக் கண்டு மன்னன் ஆனந்தம் கொண்டான். இதேபோல சிலைகள் வேறு யாருக்கும் கிடைக்கக்கூடாது என்ற எண்ணத்தில் ஸ்தபதியை கொன்றுவிடும் படி காவலாளிகளுக்கு கட்டளையிட்டான். வீரர்கள் ஸ்தபதியின் மீது இரக்கம் கொண்டு அவரது கையை மட்டும் வெட்டிவிட்டனர். இதைக் கேள்விப்பட்ட ராமபாண்டியன், வீரபாண்டியன் மீது கோபம் கொண்டான்.

ஸ்தபதியின் கையை வெட்டிய வீரபாண்டியனின் கைகளைத் துண்டித்தான். இவ்வாறு செய்யப்பட்ட இரண்டு சிலைகளும் கட்டாரிமங்கலம் மற்றும் கரிசூழ்ந்தமங்கலத்தில் உள்ள சிவாலயங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டன. இதன் பிறகு ஸ்தபதிக்கு மரக்கை பொருத்தப்பட்டது. கலையார்வம் மிக்க ஸ்தபதி, மரக்கைகளின் உதவியுடன், முன்னைவிட அழகாக மற்றொரு சிலை செய்தார். அந்தச்சிலையின் அழகைப் பார்த்து அதன் கன்னத்தில் கிள்ளினான். கிள்ளிய வடுவுடன் கூடிய சிலை கருவேலங்குளம் கோயிலில் வைக்கப்பட்டது.

🅱 *செல்லும் வழி:*🅱

திருநெல்வேலிக்கு சற்று முன்புள்ள தாழையூத்தில் இருந்து ராஜவல்லிபுரம் செல்லும் விலக்கில் திரும்பி  செப்பறையை அடையலாம். அங்கிருந்து திருநெல்வேலி பைபாஸ் ரோடு வழியாக பத்தமடை செல்ல வேண்டும். பத்தமடையிலிருந்து கரிசூழ்ந்தமங்கலம் விலக்கில் திரும்பி 3 கி.மீ., தூரத்திலுள்ள கரிசூழ்ந்தமங்கலம் செல்லலாம். இங்கிருந்து பத்தமடை வழியாக நாகர்கோவில் செல்லும் ரோட்டில் 15 கி.மீ., சென்றால் கருவேலங்குளத்தை அடையலாம். பின்பு களக்காடு, நான்குநேரி, மூலக்கரைப்பட்டி வழியாக கட்டாரிமங்கலத்தை 40 கி.மீ., கடந்து அடையலாம். 

ஆருத்ரா தரிசனம் அன்று இந்தக் கோயில்கள் முழுநேரமும் திறந்திருக்கும். மற்ற நாட்களில் காலை 7.30-10 மணி, மாலை 5-6.30 மணி வரை திறந்திருக்கும்.

இந்த திருநன்நாளில் இறைவனின் ஆனந்த நடனம் கண்டு அருள் பெருவோமாக!.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக