செவ்வாய், 15 ஆகஸ்ட், 2017

பரமனின் அட்ட வீரட்டான தலங்கள்...



பரமனின் அட்ட வீரட்டான தலங்கள்...
-
தமிழ்நாட்டில் உள்ள எட்டு திருத்தலங்களில் சிவபெருமானின் எட்டு வீரச் செயல்கள் நடந்ததாகப் புராணங்கள் கூறுகின்றன. அந்த எட்டு வீரச் செயல்களையும் அட்ட வீரட்டகாசம் என்றும், எட்டு தலங்களையும் அட்ட வீரட்டான தலங்கள் என்றும் கூறுவது வழக்கம். எட்டு வீரட்டான தலங்களிலும் ஈசனின் பெயர் வீரட்டானேசுவரர் என்பதாகும்.
-
*திருக்கண்டியூர்:* தஞ்சாவூர் திருவையாறு மார்க்கத்தில், திருவையாற்றுக்கு இரண்டு கி.மீ. முன்பாக இத்தலம் அமைந்துள்ளது. இறைவியின் பெயர் மங்களநாயகி. இத்தலத்தில் பிரம்மனின் சிரசை ஈசன் தன் சூலத்தால் கண்டனம் செய்தார். அதனால் கண்டனபுரம் என அழைக்கப்பட்டு, மேலும் மருவி கண்டியூர் ஆயிற்று.
-
*திருக்குறுக்கை:* மயிலாடுதுறையிலிருந்து மணல்மேடு செல்லும் வழியில், நீடூர் தாண்டி கொண்டால் என்ற இடத்திலிருந்து மூன்று கி.மீ தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது. இறைவியின் பெயர் ஞானாம்பிகை. இத்தலத்தில், தன் மீது காமபாணம் தொடுத்து நின்ற மன்மதனை ஈசன் சாம்பலாக்கினார். காமனைத் தகனம் செய்த இடம் "விபூதிக்குட்டை" என்ற பெயரில் ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது;
-
*திருப்பறியலூர்:* மயிலாடுதுறையிலிருந்து திருகடுவூர் செல்லும் வழியில் செம்பனார் கோயிலிலிருந்து இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. இறைவியின் பெயர் இளங்கொடி அம்மை. பிரம்மனின் மூத்த குமாரனுமான, அன்னை பார்வதியின் தந்தையுமான தக்ஷனை, சிவபெருமான் வீரபத்திரர் சொரூபமாக இங்கே தான் தலையைக் கொய்து அழித்தார். இத்தலம் தக்ஷபுரம் என்றும் அழைக்கப்படுகிறது.
-
*திருவழுவூர்:* மயிலாடுதுறையிலிருந்து ஏழு கி.மீ. தூரத்தில் இத்தலம் அமைந்துள்ளது. இறைவியின் பெயர் பால குஜாம்பாள். கஜாசுரன் என்ற அரக்கனை, ஈசன் ஆயிரம் கோடி சூரியன் திரண்டாற்போன்ற பேரொளி பொங்கும் தோற்றம் கொண்டு தோலை உரித்து மார்பைப் பிளந்து கொன்றார். மாசி மாத மகத்தன்று கஜ சம்ஹார நடனம் விசேஷமாக நடைபெறும்.
-
*திருவிற்குடி:* மயிலாடுதுறையிலிருந்து திருவாரூர் மார்க்கத்தில், நன்னிலத்திற்கு அடுத்த ரயில் நிலையம் அருகில் இத்தலம் அமைந்துள்ளது. இறைவியின் பெயர் ஏலவார்குழலி (பரிமளாம்பிகை). ஜலந்தரன் என்ற அரக்கனை அழித்த தலம். ஈசன் தன் திருவடியால், நிலத்தில் ஒரு வட்டம் கீறினார். சக்கரமாக மாறிய அந்த வட்டத்தைப் பிளந்து எடுக்குமாறு ஜலந்தரனை சவால் செய்தார். சக்கரத்தைப் பிளந்து எடுத்து தலையில் ஆணவத்தோடு வைத்தவுடன் ஜலந்தரன் தலைவெடித்து இரு கூறானது.
-
*திருவதிகை:* கடலூர் மாவட்டத்திலுள்ள பண்ருட்டியிலிருந்து இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இறைவியின் பெயர் பெரியநாயகி (திரிபுரசுந்தரி). தாரகாட்சன், கமலாட்சன், வித்யுன்மாலி எனும் மூன்று அரக்கர்கள் பொன், வெள்ளி, இரும்பு எனும் மூன்று கோட்டைகளை அமைத்து முனிவர்களைத் துன்புறுத்தி வந்தனர். ஈசன் பிரம்மாண்டமான தேரில் அமர்ந்து போருக்குச் சென்று அரக்கர்களை அழித்து முப்புரங்களையும் சாம்பலாக்கினார்.
-
*திருக்கோவிலூர்:* விழுப்புரம் திருவண்ணாமலை மார்க்கத்தில் தென்பெண்ணை யாற்றின் கரையில் அமைந்துள்ளது. இறைவியின் பெயர் சிவானந்த வல்லி. ஈசனிடமிருந்தே அருள்பெற்று ஆணவத்தில் தேவர்களையும், முனிவர்களையும் துன்புறுத்தி வந்த அந்தகாசுரனை அழித்த இடம் அது. அந்தகாசுரனைக் கீழே தள்ளி மிதித்துக்கொண்டு அவன் மேல் சூலத்தை பாய்ச்சும் நிலையில் அந்தகாசுர சம்ஹார மூர்த்தி தோற்றமளிக்கிறார்.
-
*திருக்கடையூர்:* தஞ்சாவூர் மாவட்டத்தில், மயிலாடுதுறை தரங்கம்பாடி மார்க்கத்தில் இத்தலம் அமைந்துள்ளது. இறைவியின் பெயர் அபிராமி. எமதர்மனிடமிருந்து தன்னைக் காத்துக் கொள்ளும் முயற்சியில் மார்க்கண்டேயன் தன்னை சிவலிங்கத்தோடு சேர்த்து கட்டிக்கொண்டான். எமதர்மன் பாசக்கயிற்றை வீச அது லிங்கத்தையும் சுற்றிவிட்டது.
-
இறைவன் லிங்கத்திலிருந்து வெடித்து எழுந்து எமனைக் காலால் உதைத்து மாய்த்த தலம் இது. கார்த்திக்கை மாதம் சோமவார அபிஷேகம் நடக்கையில் இறைவன் திருமேனியில், எமதர்மன் பாசக்கயிற்றால் இழுத்த போது ஏற்பட்ட தழும்பைக் காணலாம் இக்கோயிலில் தினமும் திருமணங்கள், சஷ்டியப்தபூர்த்தி, சதாபிஷேகம் போன்ற சடங்குகள் நடக்கும்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக