சனி பகவானை நேருக்கு நேர் வணங்க கூடாது என்பது ஏன்?
கோயிலில் ஸ்தாபிக்கப்பட்ட எந்த ஒரு தெய்வத்தையும் வணங்கும்போது, நேருக்கு நேர் நின்று தரிசிக்கக் கூடாது. அந்த தெய்வத்தின் பார்வையை சக்தியை நம்மால் தாங்கிக்கொள்ள இயலாது. சன்னிதியின் இருபக்க வாட்டிலும் நின்று தரிசிக்க வேண்டும். தெய்வ சக்தியை நேருக்கு நேர் எதிர்கொள்ளும் சக்தியை உடைய நந்தி, கருடாழ்வார், சிம்மம் போன்ற அந்த தெய்வ வாகனங்கள் மட்டும் நேருக்கு நேர் அமைக்கப்பட்டிருப்பதை கோயில்களில் காணலாம்.
நவக்கிரகங்களில் ஒவ்வொரு கிரகத்துக்கும் அதன் இருப்பிடம், சேர்க்கை, பார்வை ஆகியவற்றைப் பொறுத்து ஒவ்வொரு விதமான பலன்கள் உண்டு. இதற்கு ஸ்தான பலம், ஸம்யோக பலம், த்ருஷ்டி பலம் என்று சொல்வார்கள். இயற்கையிலேயே அசுபகிரஹமான சனி கிரஹத்தின் 3, 7, 10ஆம் பார்வை பொதுவாக அசுப பலனையே ஏற்படுத்தும். ஆகவே, சனியின் பார்வை பொதுவாக அசுபத்தையே ஏற்படுத்தும் என்பதால், கோயில்களிலும் சனீஸ்வரன் சன்னிதியில் (சனியின் பார்வை நம் மீது விழக்கூடாது என்பதால்) நேருக்கு நேர் நின்று அமர்ந்து சனியை தரிசிப்பதைத் தவிர்க்கிறார்கள். இது ஏற்றுக்கொள்ளக் கூடியதுதான்.
நவக்கிரகங்களை, தன் கட்டுப்பாட்டில் வேலைக்காரர்களாக வைத்து கொடுமைப்படுத்தி வந்த இலங்கை வேந்தன் இராவணன், சூரியன், சந்திரன், செவ்வாய் முதலான ஒன்பது கிரகங்களையும் தனது சிம்மாசனத்தின் கீழே அமைக்கப்பட்டிருக்கும் படிக்கட்டுகளில் படுக்க வைத்து, தான் அரியணையில் ஏறும்போதும் இறங்கும்போதும் அவர்களின் மார்பின் மீது தனது கால்களை வைத்து அவர்களை மிதித்துக் கொண்டே அரியணை ஏறும் வழக்கத்தைக் கொண்டிருந்தான். இதற்காக நவக்கிரகங்கள் ஒன்பதும் ஒவ்வொரு படிகளிலும் ஒவ்வொன்றாக வரிசையாக மேல்நோக்கி படுத்துக் கொண்டிருக்கும். ஆனால், நவக்கிரகங்களில் சனி கிரகம் மட்டும் (தனது பார்வை பட்டால் கெடுதல் விளையும் என்பதால்), மேல் நோக்கிப் படுக்காமல் கீழ் (தரையை) நோக்கி குப்புறப்படுத்திருந்தது.
இதை கவனித்த நாரதர், இராவணனின் கொடுமைக்கு முடிவு கட்ட வேண்டும் என்பதற்காக, இராவணன் சபைக்கு வந்து, ராவணன் நவக்கிரஹங்களை காலால் மிதித்து அரியணை ஏறுவதை கவனித்தார். அப்போது ராவணனிடம் நாரதர், ராவணா! உனது கட்டளையை அனைவரும் மதித்து, மேல் நோக்கி படிகளில் படித்திருக்கிறார்கள். ஆனால், இந்த சனி கிரகம் மட்டும் உனது கட்டளையை அவமதிக்கும் வகையில் கீழ் (தரை) நோக்கி படுத்திருக்கிறது பார்த்தாயா! என்று கூற, ராவணனும் சனியை மேல் நோக்கி படுக்கச் சொன்னான்.
தனது பார்வையால் கெடுதல் விளையும் என்பதை சனி கிரகம் எடுத்துச் சொல்லியும் ராவணன் பிடிவாதமாக இருக்கனே, சனியும் படிக்கட்டில் மேல் நோக்கியவாறு திரும்பிப் படுத்தது. ராவணன் தனது காலால் சனியை மார்பில் மிதிக்கும்போது சனி கிரகத்தின் குரூரமான பார்வை, இராவணனின் மீது விழுந்தது. அது முதல் ராவணனுக்கு அனர்த்தம் ஆரம்பமாயிற்று. நாரதரும் வந்த வேலை முடிந்ததை எண்ணி மகிழ்ச்சியுடன் புறப்பட்டார். புராணத்தில் காணப்படும் இந்த நிகழ்வின் மூலம் சனியின் பார்வை நம் மீது விழாமல் இருப்பது சிறப்பானது என்பது தெரிகிறது...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக