மஹா சங்கடஹர சதுர்த்தி
(11.08.2017 - வெள்ளி)
அங்கிங்கெணாதபடி எங்கும் வியாபித்திருக்கும் ஓம் எனும் ஓங்கார வடிவமாக விளங்குபவர் ஸ்ரீ விநாயகப் பெருமான்.
யானை முகமும், மனித உடலும், நான்கு கரங்களும், பெருத்த வயிறும், முறம் போன்ற காதுகளும் கொண்டு அருளே வடிவாக அமைந்தவர் ஸ்ரீ விநாயகப் பெருமான். மிகவும் எளிமையான கடவுள் கணபதி. வேண்டுவோருக்கு வேண்டுவன அருளக் கூடியவர்.
வேதங்கள் போற்றும் வேழமுகத்தோன். அனைவருக்கும் அருள்பாலிக்கும் ஆனைமுகத்தோன். ஸ்ரீ விநாயகரே முழு முதற்கடவுள் எனக் கொண்டு வழிபாடு செய்வது காணாபத்தியம் எனும் வழிபாட்டு முறையாகும்.
ஸ்ரீ விநாயக மூர்த்தியை வழிபட பல்வேறு வழிபாடுகள் இருந்த போதிலும், சங்கடஹர சதுர்த்தி வழிபாடு மிக மிக முக்கியமானது.
சங்கடஹர சதுர்த்தி வழிபாடு :
ஒவ்வொரு பௌர்ணமிக்கும் பிறகு வரக்கூடிய நான்காவது நாளான சதுர்த்தி (தேய்பிறை சதுர்த்தி) சங்கடஹர சதுர்த்தி ஆகும்.
வளர்பிறை சதுர்த்தியில் வானில் சந்திரனைப் பார்ப்பது அல்லது நான்காம் பிறையைப் பார்ப்பது கேடு விளைவிக்கும் என்பது பெரியோர்கள் வாக்கு.
ஆனால், பௌர்ணமிக்குப் பிறகு வரக்கூடிய தேய்பிறை சதுர்த்தி மிகவும் சிறப்பு வாய்ந்தது. இதுவே சங்கடஹர சதுர்த்தி ஆகும்.
ஸ்ரீ விநாயகப் பெருமானை தேய்பிறை சதுர்த்தியில் வழிபாடு செய்வது மிகப் பெரும் நற்பலன்களைத் தரக்கூடியது.
சந்திர பகவான் தனது தோஷங்கள் நீங்கவும், தனது தேய்மானம் நீங்கவும் தேய்பிறை சதுர்த்தி தினத்தன்று ஸ்ரீ விநாயகப் பெருமானை நினைந்து கடும் தவம் செய்ய, சந்திரனின் கலைகள் எனும் பிறைகள் வளர அருள்பாலித்தார்.
தேய்பிறை என்றாலும் விநாயகரின் அருளால் சந்திரனுடைய தேஜஸ் வளர்ந்தது. அந்த நன்னாளைத் தான் நாம் சங்கடஹர சதுர்த்தியாக வழிபட்டு வருகின்றோம்.
சங்கடம் என்றால் இக்கட்டு, தொல்லைகள், கஷ்டங்கள், தடைகள் என்று அர்த்தம். ஹர என்றால் நீக்குவது என்று பொருள்.
வாழ்வில் கஷ்ட நஷ்டங்கள் யாவும் நீங்கப் பெற்று வாழ்வாங்கு வாழ சங்கட ஹர சதுர்த்தி வழிபாடு மிக முக்கியமானதாகின்றது.
மற்றுமொரு புராணத்தில் ஸ்ரீ கிருஷ்ணர், வளர்பிறை சதுர்த்தி தினத்தில் வானில் நிலவைப் பார்த்ததால், ஒரு பெரும் அபவாதம் கிடைக்கப் பெற்றார். சியமந்தக மணி எனும் கல்லினால் பெரும் கெட்டபெயர் ஏற்பட்டது. (சத்ராஜித், சூரியன், பாமா, பிரசேனன், ஜாம்பவான், ஜாம்பவதி, அக்ரூரர் என்பவர்களால் - சம்பவங்கள் நிறைந்த பெரும் கதை - ஸிம்ஹ: பிரஸேநம் அவதீத் ஸிம்ஹோ ஜாம்பவதா ஹத: ஸுகுமாரக மா ரோதீ: தவ ஹ்யேஷ ஸ்யமந்தக:- சியமந்தக உபாக்யானம்) சியமந்தக மணியைப் பற்றி மேலும் விபரம் அறிய இங்கே க்ளிக் செய்யுங்கள்.
வளர்பிறை சதுர்த்தி தினத்தில் சந்திரனைப் பார்த்ததால், கெட்ட பெயர் ஏற்பட்டு, அதை நீக்க வேண்டி, ஸ்ரீ விநாயகருக்கு தேய்பிறை சதுர்த்தி தினத்தில் ஸ்ரீ கிருஷ்ணர், பூஜையைச் செய்தார். விநாயகர் அவருடைய அபவாதம் நீங்குவதற்கு அனுக்கிரகம் செய்தார். ஸ்ரீ கிருஷ்ணர் வழிபாடு செய்து, கெட்ட பெயர் நீக்கிக்கொண்டு நற்பெயர் பெற்றதை நினைவு கூறும் வகையிலும் சங்கடஹர சதுர்த்தி வழிபாடு முக்கியமானதாகின்றது.
ஸ்ரீ விநாயகருக்கு முப்பத்திரண்டு வடிவங்கள் உண்டு. இவற்றை மூர்த்தி பேதங்கள் என்று கூறுவார்கள். அவற்றில் பதினாறு மிகவும் முக்கியமானவை. அவற்றில் ஒன்று சங்கடநாஸன கணபதியாகும்.
ஒவ்வொரு வகையான பலனைப் பெறவேண்டி ஒவ்வொரு வகையான விநாயக வடிவங்களை வணங்குவதுண்டு. கடன் நீங்க ருணமோசன கணபதியையும் பணம் வேண்டி லட்சுமி கணபதியையும் வழிபடுவதுண்டு. அந்தந்த வழிபாட்டிற்கு உரிய தனிப்பட்ட மந்திரங்களும் முறைகளும் உண்டு.
சந்திரனும் விநாயகரைச் சிறப்பாக வழிபட்டுப் பல சிறப்புகளுடன் விநாயகருடைய திருமுடியில் பிறைச் சந்திரனாகவும் நெற்றியில் முழு நிலவுத் திலகமாகவும் விளங்கும் பேறு பெற்றான். விநாயகருக்கு பாலசந்திரன் என்றும் பெயர் உண்டு. மேலும் சங்கடஹர சதுர்த்தியன்று சந்திரனையும் தரிசிக்க வேண்டிய முறையும் உண்டாகியது.
சங்கடங்கள், இக்கட்டுகள், நெருக்கடிகள் தீருவதற்கு சங்கடஹர கணபதியை வணங்குகின்றோம்.
சங்கடஹர கணபதியை வணங்கியவர்களில் செவ்வாய் கிரகம் எனப்படும் அங்காரகன் முக்கியமானவர். விநாயகரை வழிபட்டுப் பல மங்கலங்களுடன் கிரகப் பதவியையும் 'மங்கலன்' என்னும் சிறப்புப் பெயரையும் விநாயகரிடமிருந்து பெற்றார். ஆகையால் சங்கடஹர சதுர்த்திக்கு அங்காரகச் சதுர்த்தி என்றும் பெயர் ஏற்பட்டுள்ளது. செவ்வாய்க் கிழமையன்று வரும் சங்கடஹர சதுர்த்தி மிகவும் சிறப்பு வாய்ந்தது. சங்கடஹர சதுர்த்தியன்று விரதம் இருந்து வழிபட்டால் சங்கடங்கள் தீருவதோடு செவ்வாய் கிரகத்தால் ஏற்படும் கெடுதல்களும் தோஷங்களும் நீங்கும்.
சங்கடஹர சதுர்த்தி தின வழிபாட்டினால், சனி பகவானின் பார்வையால் ஏற்படும் தோஷங்களும், ஸர்வ ரோகங்கள் எனும் நோய்களும் (கலௌ சண்ட விநாயக: - புராண வாக்கியம்) நீங்குகின்றன என்று புராணங்கள் கூறுகின்றன.
சங்கட ஹர சதுர்த்தி ஒவ்வொரு மாதமும் உண்டு.
விநாயகர் சதுர்த்திக்கு (ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தி) முன்னதாக வரும் சங்கடஹர சதுர்த்திக்கு மஹா சங்கட ஹர சதுர்த்தி என்று பெயர்.
வருடத்தின் அனைத்து சங்கடஹர சதுர்த்தி வழிபாடுகளையும் செய்த பலன் ஒரு மஹா சங்கடஹர சதுர்த்தியில் வழிபாடு செய்வது கிடைக்கப் பெறும்.
சங்கட ஹர சதுர்த்தி வழிபாட்டினால் கிடைக்கப் பெறும் பலன்கள் :
கோசாரப் பலன்களை அருளும் சந்திர பகவான் விநாயகரின் அருள்பெற்றதால், சந்திர பகவானின் நற்பலனாக, நம் அன்றாட வாழ்வில் ஏற்படும் தடங்கல்கள் நீங்கும்.
செவ்வாய் பகவான் வழிபட்டதால், அங்காரக (செவ்வாய்) தோஷ பாதிப்புகள் நீங்கித் திருமணத் தடைகள் நீங்கும். நல்ல மங்கலமான நல்வாழ்வு அமையும்.
சனி பகவானின் தோஷம் நீங்குவதால், ஆயுள் அபிவிருத்தி, பதவி உயர்வு போன்றவை கிடைக்கும்.
நெய்வேலி, ஸத்சங்கம் - மணித்வீபம் வளாகத்தில், ஸ்ரீ வரசித்தி சக்தி விநாயகர் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றார்.
நெய்வேலி நகரத்தின் பழமையான கோயில்களில் ஒன்று ஸ்ரீ வரசித்தி சக்தி விநாயகர் ஆலயம். காஞ்சி மஹா பெரியவரின் அருட்கரங்களில் தவழ்ந்தது இந்த விநாயகர் விக்ரஹம். அவர் கூறிய ஆலோசனைகளின் படியே ஸ்ரீ வரசித்தி சக்தி விநாயகர் ஸ்தாபிதம் செய்யப்பட்டார்.
பெயருக்கு ஏற்றார் போல, வரங்களை வாரி வழங்கும் வள்ளலாக விளங்குபவர் வரசித்தி சக்தி விநாயகர்.
வேண்டும் வரங்களை உடனடியாக சித்திக்க (கிடைக்க) வழிகோலுபவர். அருட்சக்தி நிறைந்தவர்.
ஸ்ரீ வரசித்தி சக்தி விநாயகருக்கு ஒவ்வொரு சங்கடஹர சதுர்த்தியிலும் மிக விசேஷமான வழிபாடுகள் நடைபெறும்.
சங்கடஹர சதுர்த்தியின் மாலை நேரத்தில், விநாயகருக்கு ஸகல திரவிய அபிஷேகங்கள் வேதகோஷங்களோடு செய்யப்படும்.
பலன்களை வெகு விரைவில் அருளும் "ஸ்ரீ விநாயகர் திரிசதி (300 நாமாவளிகள்) கொண்டு அர்ச்சனை செய்யப்படும். பிறகு மஹா தீபாராதனை நடைபெறும்.
கஷ்டங்களை நீக்கும் கணநாயகாஷ்டகம் :
'முதாகராத்த மோதகம்' எனத் தொடங்கும் கணேச பஞ்சரத்னம் (5 பாடல்கள்) போல, கணநாயக அஷ்டகம் (எட்டு பாடல்கள்) சிறப்பு வாய்ந்த ஒன்று. விநாயகரை வழிபடும்போது இந்த கணநாயகாஷ்டகத்தைச் சொல்வது அனைத்து பாபங்களையும் அழித்து, நற்கதி அடைய வழிசெய்யும்.
ஸ்ரீ கணநாயகாஷ்டகம்
ஏகதந்தம் மஹாகாயம் தப்த காஞ்சன ஸந்நிபம் I
லம்போதரம் விசா'லாக்ஷம் வந்தே(அ)ஹம் கணநாயகம் II
மெளஞ்ஜீ க்ருஷ்ணாஜினதரம் நாகயக்ஞோபவீதினம் I
பாலேந்து விலஸன் மெளலிம் வந்தே(அ)ஹம் கணநாயகம் II
அம்பிகா ஹ்ருதயானந்தம் மாத்ருபி: பரிபாலிதம் I
பக்தப்ரியம் மதோன்மத்தம் வந்தே(அ)ஹம் கணநாயகம் II
சித்ர ரத்ன விசித்ராங்கம் சித்ரமாலா விபூஷிதம் I
சித்ரரூபதரம் தேவம் வந்தே(அ)ஹம் கணநாயகம் II
கஜவக்த்ரம் ஸுரச்'ரேஷ்ட்டம் கர்ணசாமர பூஷிதம் I
பாசா'ங்குச தரம் தேவம் வந்தே(அ)ஹம் கணநாயகம் II
மூஷிகோத்தமம் ஆருஹ்ய தேவாஸுர மஹாஹவே I
யோத்துகாமம் மஹாவீர்யம் வந்தே(அ)ஹம் கணநாயகம் II
யக்ஷ கின்னர கந்தர்வ ஸித்த வித்யாதரை: ஸதா I
ஸ்தூயமானம் மஹாத்மானம் வந்தே(அ)ஹம் கணநாயகம் II
ஸர்வவிக்ன ஹரம் தேவம் ஸர்வவிக்ன விவர்ஜிதம் I
ஸர்வஸித்தி ப்ரதாதாரம் வந்தே(அ)ஹம் கணநாயகம் II
கணாஷ்டகம் −தம் புண்யம் பக்திதோ ய: படேந் நர: I
விமுக்த ஸர்வ பாபேப்யோ ருத்ரலோகம் ஸ கச்சதி II
விநாயகரைப் பணிவோம் ! வினைகள் நீங்கப் பெறுவோம்...
தோஷங்கள் நீங்கும் சந்தோஷம் பெருகும்! மஹா சங்கடஹர சதுர்த்தி!
விநாயகர், முழுமுதற் கடவுள். அவருக்கு உகந்த விரதம், சங்கட ஹர சதுர்த்தி விரதம். அதிலும் மிக விசேஷமானது மஹா சங்கட ஹர சதுர்த்தி விரதம்.
சந்திரனுக்குக் கிடைத்த சாபம்!
ஒருமுறை, சந்திரன் கயிலைக்குச் சென்றிருந்தபோது, அங்கு விநாயகர் விளையாடிக்கொண்டு இருந்ததைப் பார்த்தான். விநாயகர் குதித்துக் குதித்து விளையாடுவதற்கு ஏற்ப, அவருடைய தொந்தியும் குலுங்கிகொண்டிருந்தது. அதைப் பார்த்ததும், சந்திரனுக்குச் சிரிப்பு வந்துவிட்டது. விநாயகரைப் பார்த்து கேலியாகச் சிரித்தான். அந்தச் சிரிப்பு விநாயகருக்குக் கோபத்தை வரவழைத்துவிட்டது. உடனே, ``நீ தேய்ந்து மறையக்கடவாய் என்று சந்திரனைச் சபித்துவிட்டார்.
சந்திரன் மறைந்ததால், உலகம் இருளில் மூழ்கியது. தேவர்கள் விநாயகரைச் சரண் புகுந்தார்கள். தன் தவற்றுக்கு வருந்திய சந்திரனும் தன்னை மன்னிக்குமாறு வேண்டித் தவம் புரிந்தான். மனம் இரங்கிய விநாயகர், சந்திரனைத் தன் தலையில் சூடிக்கொண்டார்.
`பாலசந்திரன் என்ற பெயருடன் அருள்பாலித்து, சந்திரனுக்கு வளரும் தன்மையைத் தந்தார். அதாவது, 15 நாட்கள் மெல்லத் தேய்ந்து (தேய் பிறை), பின்பு 15 நாட்கள் மெள்ள வளரும்படியான (வளர் பிறை) வரத்தை அருளினார். அப்படி, சந்திர பகவான் வரம் பெற்ற நாள் தேய்பிறை சதுர்த்தி.
`சங்கட ஹர' என்றால், `சங்கடத்தை (துன்பத்தை) நீக்குதல்f என்று பொருள். உலக வாழ்வில் நாம் செய்த கர்மவினையின் பலனாக வரும் எல்லாவித இன்னல்களையும் போக்கி, அளவில்லாத நன்மைகளைத் தருவதால் இந்த விரதம் சங்கட ஹர சதுர்த்தி விரதம் என்று போற்றப்படுகிறது.
சங்கடஹர சதுர்த்தி மாதம்தோறும் வரும் என்றாலும், விநாயகர் அவதரித்த ஆவணி மாதத்தில் பௌர்ணமிக்குப் பிறகு வரும் (தேய்பிறை) சதுர்த்தி, மஹா சங்கடஹர சதுர்த்தி என்று கூடுதல் சிறப்பு பெறுகிறது. அன்றைய தினத்தில் விநாயகரை வணங்கி, வழிபடுவோருக்கு, சகலவிதமான சங்கடங்களும் விலகும்; சந்தோஷம் பெருகும்.
நான்காம் பிறையை பார்க்கக் கூடாது ஏன்?
பொதுவாக, `நாலாம் பிறைfயைப் பார்க்கக் கூடாதுf என்பார்கள் பெரியவர்கள். நான்காம் நாள் பிறையைப் பார்ப்பவர்களுக்கு `மித்ர தோஷம்' ஏற்படும் என்று வரலாறு கூறுகிறது. ஒருமுறை, பகவான் கிருஷ்ணரே நாலாம் பிறையைப் பார்த்துவிடுகிறார். அதன் விளைவாக அவருக்கும் மித்ர தோஷம் ஏற்படுகிறது.
சத்ராஜித் என்னும் மன்னன் சூரியனை வழிபட்டு, அதன் பலனாக சூரிய பகவானிடமிருந்து சியமந்தக மணியைப் பெற்றான். அவன் அந்த ரத்தினத்தை அணிந்திருந்தபோது, சூரிய பகவானைப்போல் பிரகாசத்துடன் காணப்பட்டான். அந்த நேரத்தில், அங்கு வந்த கிருஷ்ண பகவான், அந்த மணியைக் கையில் எடுத்துப் பார்க்க ஆவல்கொண்டார். ஆனால், சத்ராஜித் அதற்கு மறுத்துவிட்டான்.
பிறகு ஒருமுறை, சத்ராஜித்தின் சகோதரன் ப்ரசேனன், அந்த ரத்தினத்தை (சியமந்தக மணி) அணிந்துகொண்டு வேட்டைக்குச் சென்றான். அப்போது சிங்கம் ஒன்று அவனைத் தாக்கிக் கொன்று, அந்த ரத்தினத்தையும் எடுத்துச் சென்றுவிட்டது. இதனால், சத்ராஜித் மன்னனும், மற்ற பொதுமக்களும் பகவான் கிருஷ்ணர் மீதே சந்தேகம் கொண்டனர். இதனால், கிருஷ்ணர் அவமானத்துக்குள்ளாக நேர்ந்தது.
இதைக் கேள்விப்பட்ட ஸ்ரீநாரதர் கிருஷ்ணரிடம் வந்தார். `நாலாம் பிறையைப் பார்த்ததால் வந்த விளைவே இதுf என்றார். `சதுர்த்தியன்று விநாயகப் பெருமானை தரிசித்தால், இந்தப் பழியில் இருந்து நீங்கலாம்' என்று ஆலோசனையும் கூறினார். அதன்படியே, கிருஷ்ணரும் விநாயகரை வழிபட்டு, தனக்கு நேர்ந்த அவமானத்தைத் துடைக்க, அந்த ரத்தினத்தைத் தேடி தானே புறப்பட்டார். இறுதியில் கரடிக் கூட்டத்தின் தலைவனான ஜாம்பவானிடம் அந்த ரத்தினம் இருப்பதை அறிந்து, அவனுடைய குகையை நோக்கிச் சென்றார்.
இந்த ஜாம்பவான் வேறு யாருமல்ல; ராமாவதாரத்தின்போது சீதா பிராட்டியைக் கண்டடைய ஸ்ரீராமருக்கு உதவி செய்தவரேதான்! ஆஞ்சநேய சுவாமிக்கு அவரது பலம் குறித்து நினைவூட்டியவரும் இவரே. இவருக்கு ஸ்ரீராமபிரானைக் கட்டித் தழுவ வேண்டுமென்ற ஆசை நெடுநாளாக இருந்தது. ஆனால், தன் உடம்பில் இருக்கும் ரோமங்கள் அவரை புண்ணாக்கிவிடக்கூடும் என்று அஞ்சி, தமது ஆசையை வெளிப்படுத்தாமல் அடக்கிக்கொண்டிருந்தார்.
ராமர் மீது இந்த அளவுக்கு பக்திகொண்டிருந்த ஜாம்பவான், ஸ்ரீகிருஷ்ணர்தான் ராமராகவும் அவதரித்தவர் என்பதை அறியாமல், அவருடன் போர்புரிய ஆயத்தமானார். துவந்த யுத்தமும் தொடங்கியது. இருவரும் கட்டிப் புரண்டு சண்டையிடும்போதுதான், தன்னுடன் சண்டை இடுபவர் ஸ்ரீராமர் என்று அறிந்தார் ஜாம்பவான்.
பின்னர், நடந்த தவற்றுக்கு மன்னிப்புக் கோரி, தனது மகளான ஜாம்பவதியை கிருஷ்ணருக்கு மணமுடித்துவைத்தார். சமந்தகமணி என்கிற ரத்தினத்தையும் அவரிடமே ஒப்படைத்தார். அந்த சமந்தக மணியை சத்ராஜித்திடம் சேர்ப்பித்தார் ஸ்ரீகிருஷ்ணர். கிருஷ்ணர் மீது வீண் பழி சுமத்தியதற்காக வருந்திய சத்ராஜித், அவரிடம் மன்னிப்புக் கோரி, தன் மகளான சத்யபாமாவையும் அவருக்கே மணமுடித்துத் தந்தான். இந்தப் புராணக் கதையைப் படிப்பவர்கள் அனைவரும், தங்களுக்கு ஏற்பட்ட வீண்பழியிலிருந்து நீங்கப் பெறுவர் என்பது ஐதீகம்.
நாமும், சிராவண மாதத்தில் வரும் இந்தச் சங்கட ஹர சதுர்த்தியன்று விநாயகப் பெருமானை வழிபட்டால், அந்த வருடம் முழுக்க வரும் சங்கட ஹர சதுர்த்திகள் அத்தனைக்கும் சேர்த்து வழிபட்ட பலனை அடையலாம். நாளை மஹா சங்கடஹர சதுர்த்தி. விரதம் இருப்பது எப்படி என்பதை அறிவோமா?
விரதம் இருக்கும் முறை:
காலையில் நீராடி, தூய ஆடை அணிந்து, விநாயகர் சந்நிதிக்குச் சென்று, அவரை வழிபட்டு, விரதத்தைத் தொடங்க வேண்டும். அன்று முழுக்க உபவாசம் இருக்க வேண்டும். மாலையில், விநாயகர் கோயிலுக்குச் சென்று, சங்கட ஹர சதுர்த்தி பூஜையில் பங்கேற்க வேண்டும். வீடு திரும்பி, சந்திரன் உதயமானதும், அதைப் பார்த்து வணங்க வேண்டும். பிறகு, நம் வீட்டு பூஜை அறையில் இருக்கும் விநாயகரை வணங்கி விரதத்தை முடித்துக்கொள்ளலாம். அன்றைய தினம் முழுக்க விநாயகரைத் துதிப்பது நற்பலன்களைத் தரும்.
சங்கடங்கள் நீக்கும் மஹா சங்கட ஹர சதுர்த்தி விரதம்!
ஓம் தத்புருஷாய வித்மஹே வக்ரதுண்டாய தீமஹி
தன்னோ தந்தி ப்ரச்சோதயாத்!
ஏகதந்தம் மஹாகாயம் தப்த காஞ்சன ஸன்னிபம்
லம்போதரம் விசாலாக்ஷம் வந்தேஹம் கணநாயகம்!
வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்
நோக்குண்டாம் வேனி நுடங்காது பூக்கொண்டு
துப்பார் திருமேனித் தும்பிக்கையான் பாதம்
தப்பாமல் சார்வார் தமக்கு.
மாசிமாதம் தேய்பிறை (கிருஷ்ணபட்சம்)சதுர்த்தி தினம் மஹா சங்கட ஹர சதுர்த்தியாக அனுசரிக்கப்படுகிறது.முழுமுதல் கடவுள் வேழமுகனாம் விநாயகக் கடவுளுக்கு மிகவும் உகந்த விரதம் சங்கட ஹர சதுர்த்தி விரதம். இது மாதம் தோறும் தேய்பிறை (கிருஷ்ணபட்சம்) சதுர்த்தி அன்று அனுஷ்டிக்கப்படுகிறது. வருடத்தில் இரண்டு முறை ஆவணி மற்றும் மாசி மாத தேய்பிறை சதுர்த்தி தினம் மஹா சங்கட ஹர சதுர்த்தியாக விசேஷமாக அனுஷ்டிக்க படுகிறது.
விக்கினங்கள் தீர்க்கும் கடவுள் விநாயகர். அவரைக் குறித்து விரதம் இருந்து வழிபட்டு உபவாசத்துடன் நாள் முழுவதும் இருந்து அன்றைய தினம் இரவு சந்திரனை தரிசித்து வணங்கி பின்னர் உணவு அருந்த வேண்டும்.
இந்த விரதம் மாசி மாத சங்கட ஹர சதுர்த்தியில் துவங்கி அடுத்த வருடம் மாசி மாதம் சங்கட சதுர்த்தி வரை தொடர்ந்து ஒரு வருடங்கள் அனுஷ்டிக்க வேண்டும். இவ்வாறு விரதம் அனுஷ்டிப்பதால் காரியசித்தி, விக்கினங்கள் அகலுதல், திருமணவரம், புத்திரபாக்கியம், நினைத்த காரியம் நிறைவேறுதல், ஆகியன கைகூடும்.
விரத தினத்தன்று காலையில் நீராடி அருகில் உள்ள விநாயகர் ஆலயத்திற்கு சென்று வழிபட்டு உபவாசத்தை துவங்க வேண்டும் அன்று முழுவதும் ஆகாரம் அருந்த கூடாது. பின்னர் மாலையில் அருகில் உள்ள விநாயகர் ஆலயத்தில் நடைபெறும் சங்கடஹர சதுர்த்தி பூஜையில் கலந்துகொண்டு பின்னர் வீடு வந்து சந்திரன் உதயமானதும் வணங்கி விட்டு வீட்டு பூஜையறையில் விநாயகப் பெருமானுக்கு மலர் அர்ப்பணம் செய்து விரதத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.
பின்னர் முழு உணவு அருந்தாமல் சிறிதளவு சிற்றுண்டி அல்லது பால் சாப்பிட்டு விரதத்தை நிறைவு செய்ய வேண்டும். விரத தினத்தில் காபி, டீ, பாக்குபோடுதல் போன்றவை கூடாது. விநாயகர் தோத்திரங்களை மனமுருக பாடி விநாயகரை நெஞ்சில் நிறுத்தி விரதம் மேற்கொள்ளவேண்டும்.
ஆலயங்களுக்கு செல்ல முடியாதவர்கள் தம் வீட்டு பூஜையறையில் உள்ள விநாயகரை வழிபட்டு விரதம் தொடங்கி முடிக்கலாம். இவ்வாறு மாசி மாத சதுர்த்தியில் தொடங்கி அடுத்த மாசி மாத சதுர்த்தி வரை இந்த விரதம் மேற்கொள்ளவேண்டும்.
முன்னொரு சமயம் பக்தர்களால் நிவேதிக்கப்பட்ட கொழுக்கட்டைகளை தன் வயிற்றில் நிரப்பிக் கொண்டு விநாயகர் தம் மூஞ்சூறு வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது விநாயகரின் பாரம் தாங்க முடியாமல் மூஞ்சூறு தடுமாறிக் கொண்டு இருந்தது. அது மிகவும் நெடுந்தொலைவு பயணித்து இருந்தமையால் களைப்பும் அடைந்து இருந்தது.
அச்சமயம் நாகப்பாம்பு ஒன்று அவ்வழியே குறுக்கிட்டது. அதைக்கண்டு மூஞ்சூறு பயந்து நடுங்கி தாறுமாறாக ஓடத்துவங்கியது. விநாயகரையும் கீழே தள்ளிவிட்டது. இந்த அமளியில் விநாயகரின் தொந்தி வெடித்து கொழுக்கட்டைகள் சிதறின. ஆவேசமடைந்த விநாயகர் நாகப்பாம்பினை பிடித்து தன் வயிற்றினை சுற்றி கட்டிக் கொண்டார்.
இந்த காட்சிகளை கண்டு ஆகாயத்தில் சந்திரன் பரிகசித்து சிரித்தான். வெகுண்ட விநாயகர் தன் தந்தம் ஒன்றை ஒடித்து சந்திரனை நோக்கி எறிந்தார். அவ்வளவுதான் சந்திரன் ஒளி மங்கி போனான். உலகம் இருண்டது. தேவர்கள் விநாயகரை சரண் புகுந்து சந்திரனை மன்னித்து அருளும் படி கூறினார்கள். விநாயகரும் சாந்தமடைந்து பதினைந்து நாட்கள் ஒளி மங்கி போகவும் பதினைந்து நாட்கள் ஒளி அதிகரிக்கவும் அருளினார். தன்னுடைய சதுர்த்தி தினத்தில் சந்திரனை வழிபடுவோருக்கு நன்மைகள் கிடைக்கவும் அருள் செய்தார். இதன் அடிப்படையிலேயே சதுர்த்தி தினத்தன்று சந்திர தரிசனம் செய்யும் வழக்கம் உண்டாயிற்று.
விநாயகப் பெருமானை வழிபடுவோரை சனி பிடிப்பதில்லை! விக்கினங்கள் அகலும்! வேதனைகள் மறையும்!
சங்கட ஹர சதுர்த்தி நாளில் அருகில் உள்ள விநாயகர் ஆலயத்திற்கு சென்று விநாயகரை வழிபட்டு அருள் பெறுவோமாக!
தங்கள்வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக